ஹைத்தி வெளியேற்றம்; 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி

நமது நிருபர்




பிலடெல்பியாவில் இன்று காலை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். தோல்வியை தழுவிய ஹைத்தி அணியினர், தொடரில் இருந்து வெளியேறினர்.

பிரேசில் அணி சார்பில் மேத்யூஸ் குன்ஹா இரண்டு முறை கோல் அடித்து அணியினருக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இன்னொரு கோலை வினிஷியஸ் ஜூனியர் அடித்தார்.
இதன் மூலம் போட்டித் தொடரின் முதல் வெற்றியை பிரேசில் ருசித்தது.

முந்தைய ஆட்டத்தில் மொராக்கா அணியுடன் டிரா செய்த பிரேசில் அணி, வெற்றிக்கான வேட்கையுடன் களம் இறங்கி, ஹைத்தியை துவம்சம் செய்தது.


இதேபோல், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் பராகுவே அணி, துருக்கியை 1- 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம், போட்டித் தொடரில் அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பை துருக்கி அணி இழந்தது. இந்த போட்டியில், பராகுவே அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடியது.

அந்த அணியின் அல்மிரோன், துருக்கி வீரரை பார்த்து கையால் வாயைப் பொத்திக் கொண்டு ஏதோ சொன்னது, நடுவர்கள் கவனித்தனர். இதையடுத்து புதிய விதிகளின்படி அவர், ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால், 10 வீரர்களுடன் தொடர்ந்து விளையாடிய பராகுவே அணியினர், துருக்கி அணியின் கோல் வாய்ப்புகளை தடுத்தனர்.

பராகுவே அணி சார்பில் கலர்ஸா அடித்த கோல், அந்த அணியின் வெற்றிக்கு உதவியது.
அடுத்து வரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தால், பராகுவே அணி, 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

Advertisement