ரூ.300 கோடியில் கடம்பூர் தாவரவியல் பூங்கா திட்டம்... கிடப்பில்! : அரசு ஒதுக்கிய 138 ஏக்கர் நிலங்களை என்ன செய்வது?

மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த கடம்பூரில் 300 கோடி ரூபாயில், பிரமாண்ட தாவரவியல் பூங்கா அமைப்பதாக 2022ல் அறிவிக்கப்பட்டு இதுவரை பணிகள் தொடங்காததால், அந்த பகுதி முழுதும் மேய்ச்சல் நிலங்களாக மாறி உள்ளன. 138 ஏக்கர் நிலத்தில் திட்டம் அமையுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த கடம்பூர் கிராமத்தில் 138 ஏக்கர் பரப்பில் 300 கோடி ரூபாயில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என, 2022ல் அப்போதைய தி.மு.க., அரசு அறிவித்தது.

பிரிட்டனின் 'கியூ' நகரில் உள்ள 'ராயல் பொட்டானிக் கார்டன்ஸ்' போல், கடம்பூரில் தாவரவியல் பூங்காவை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதற்காக, 'கியூ ராயல் பொட்டானிக் கார்டன்ஸ்' நிர்வாகத்துடன் 2023 ஜூலை மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, 'வெஸ்ட்- 8' என்ற தனியார் நிறுவனம், இதற்கான முழுமையான திட்டத்தை தயாரித்தது.

கடம்பூர் கிராமத்தில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன; விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலத்தைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

ஐந்திணைகள் தமிழ் இலக்கிய காலத்தில் நிலங்களை அவற்றின் தன்மை, பயன்பாடு அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாக பிரித்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி வேறுபட்டிருந்ததோ, அதுபோலவே அப்பகுதிகளின் தாவரங்களும் வேறுபட்டு இருக்கும். ஒரு வகை நிலத்தில் இருக்கும் தாவரம், மற்றொரு நிலத்தில் இருக்காது.

இந்நிலையில், ஐந்து வகை நிலங்களை ஒரே இடத்தில் மக்களுக்கு காண்பிக்கும் வகையில், இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடம்பூர் தாவரவியல் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட பின், மறைமலை நகரைச் சுற்றியுள்ள, காயரம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் சூடு பிடித்து, வீட்டு மனைகள் விலையும் அதிகரித்து உள்ளது.

பல்வேறு தனியார் நிறுவனங்களும் புதிதாக வீட்டுமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகின்றன.

இந்நிலையில், இத்திட்டத்திற்காக அறிக்கை தயார் செய்து சுற்றியும் வேலி அமைக்கப்பட்ட நிலையில், கிடப்பில் போடப்பட்டது.

நல்ல முறையில் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலங்கள், தற்போது தரிசு நிலங்கள் போல காட்சியளிக்கின்றன.

அப்போதைய தி.மு.க., அரசு அறிவித்த இந்த திட்டத்தை தற்போது பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு செயல்படுத்துமா என்ற கேள்வி, பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

விவசாயிகள் கூறிய தாவது:

கடம்பூர் கிராமத்தில் கரடு புறம்போக்கு நிலங்களை, பட்டியலின மக்களுக்கு 55 ஆண்டுகளுக்கு முன் வருவாய் துறை மூலமாக ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் என பிரித்து வழங்கப்பட்டது. இதில் அவர்கள் கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனர்.

55 ஆண்டுகள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்த நிலத்தை அ.திமு.க., ஆட்சி காலத்தில் சி.எம்.டி.ஏ., கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு நடந்து வரும் நிலையிலும் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தி.மு.க., தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன், விவசாயம் செய்வதும் தடுத்து நிறுத்தப்பட்டது. புதிய அரசு, விவசாயிகள் நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது :

கடம்பூர் தாவரவியல் பூங்கா அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலப்பகுதிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதா என அடிக்கடி ஆய்வு செய்து வருகிறோம். இத்திட்டம் தொடங்குவது தொடர்பாக, தமிழக அரசும், உயரதிகாரிகளும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement