மின் பாதுகாப்பு வாரம்; மக்களுக்கு விழிப்புணர்வு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் 26 முதல் ஜூலை 2- வரை மின் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளைத் திருப்பூர் மாவட்ட மின் ஆய்வாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற ஒயர்கள் மற்றும் மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தற்காலிக ஒயரிங் முறைகளைத் தவிர்க்க வேண்டும்.
பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு எர்த் இணைப்புடன் கூடிய த்ரீ -பின் பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மின் கசிவு தடுப்பானைக் கட்டாயம் பொருத்த வேண்டும்.
சுவிட்ச் மற்றும் பிளக்குகளைக் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்; ஈரமான குளியலறை பகுதிகளில் சுவிட்ச் வைப்பதையும், கன்சீல்டு ஒயரிங் சுவர்களில் ஆணி அடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பத்து ஸ்டே கம்பிகளில் கயிறு கட்டித் துணி உலர்த்தக் கூடாது; கேபிள் டிவி ஒயர்களை மின்சாரக் கம்பிகளுக்கு அருகே கொண்டு செல்லக் கூடாது.
மழை மற்றும் காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பிகள், மின் பகிர்வுப் பெட்டிகளின் அருகே செல்லக் கூடாது; ஆபத்து நேரத்தில் உடனடியாக அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.