நரி போல் சிலர் காத்திருக்கின்றனர்; அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

16


சென்னை: ''முதல்வர் விஜய் இன்றைக்கு மட்டுமல்ல; என்றைக்கும் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் தான்'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மாமல்லபுரத்தில் நடந்த தவெகவில் அதிமுகவினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், இன்றைய முதல்வர் அல்ல, என்றைக்கு தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய். இங்கே சில பேர் பேசுகிறார்கள். இவர்கள் ஏன் தவெகவிற்கு வருகிறார்கள், துரோகிகளாக இருக்கிறார்கள் என்கின்றனர். நான் ஒன்றை ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

துரோகம் எங்கே நடைபெற்று இருக்கிறது என்பதை நீங்கள் காண வேண்டும். திமுகவுடன் இணைந்து இபிஎஸ் முதல்வர் ஆகலாம் என்று கருதுகிற போது தான் எல்லோருக்கும் அங்கே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருகிறார்கள் என்று சொன்னால், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரை நம்பினால் மட்டும் தான் நாடு வாழும். நாட்டு மக்கள் வாழ்வார்கள் என்று நம்பிக்கையுடன் தான் இங்கே வருகை தந்து இருக்கிறார்கள்.

துரோகம் செய்தவர்கள் அங்கே இருக்க கூடும். நல்லவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள், அவர்களை வரவேற்கிறேன். ஏன் என்று சொன்னால் நம்பிக்கை இங்கே இருக்கிறது. நாணயம் இங்கே இருக்கிறது. எதிர்காலம் இங்கே இருக்கிறது. நல்ல தலைமையை தேடி விஜயபாஸ்கர்கள் வந்திருக்கிறார்கள். தவெக அரசு தடுமாறுமா என நரி போல் சிலர் காத்திருக்கின்றனர். தவெக அரசை காக்கும் சக்திகளாக அதிமுகவினர் தற்போது இணைய வந்துள்ளனர்.

திமுகவுடன் இணைந்து முதல்வர் ஆகும் இபிஎஸ் கனவை தகர்த்துள்ளனர். வயதானவர்களை வைத்துக் கொண்டு மகளிரணி கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் பட்டாளம் இங்கு இருக்கிறது. தடுமாறுபவர்கள் அங்கே இருக்கிறார்கள். அரசியலில் நான் தூக்கி எறியப்பட்ட நேரத்தில் என்னை தாங்கி பிடித்து வருவாய் துறை அமைச்சராக ஆக்கிய வரலாறு இந்திய துணை கண்ட வரலாற்றில் நம் தலைவரை தவிர வேறு யாருக்கும் இல்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Advertisement