ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஆஸ்திரியா
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக கோப்பை 'ரவுண்டு-32' போட்டியில் அசத்திய ஸ்பெயின் அணி 3-0 என, ஆஸ்திரியாவை வீழ்த்தியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-32' போட்டியில் ஸ்பெயின், ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் யமால் துாக்கி அடித்த பந்தில் மார்க் குகுரெல்லா கோல் அடித்தார். ஆனால் ஸ்பெயின் வீரர் குபார்சி, ஆஸ்திரிய கோல்கீப்பர் அலெக்சாண்டர் ஷ்லாகரை தள்ளிவிட்டதால், கோல் மறுக்கப்பட்டது. பின், 36வது நிமிடத்தில் குகுரெல்லா 'பாஸ்' செய்த பந்தில் ஓயார்சபால் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 66வது நிமிடத்தில் அலெக்ஸ் பயேனா துாக்கி அடித்த பந்தை ஸ்பெயினின் பெட்ரோ போரோ தலையால் முட்டி கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஸ்பெயின் அணிக்கு 89வது நிமிடத்தில் குகுரெல்லா 'பாஸ்' செய்த பந்தில் ஓயார்சபால் மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஆஸ்திரிய அணியினால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' போட்டிக்கு தகுதி பெற்றது.
16 ஆண்டுகளுக்கு பின்...
ஆஸ்திரியாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில் வெற்றி பெற்றது. கடைசியாக 2010ல் கோப்பை வென்ற ஸ்பெயின் அணி, 2 முறை (2018, 2022) 'ரவுண்டு-16' போட்டியில் தோற்றது.
ஸ்பெயின் கீப்பர் சாதனை
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், தொடர்ச்சியாக நீண்ட நேரம் எதிரணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்த கோல்கீப்பர் வரிசையில் முதலிடம் பிடித்தார் ஸ்பெயினின் உனாய் சைமன். இவர், 519 நிமிடம் (2022ல் 159, 2026ல் 360 நிமிடம்) எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை தடுத்தார். இம்முறை லீக் சுற்றில் கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே, 'ரவுண்டு-32' போட்டியில் ஆஸ்திரியா என, எந்த ஒரு அணியும் ஸ்பெயினுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
இதற்கு முன், இத்தாலியின் வால்டர் ஜெங்கா 1990ல் நடந்த உலக கோப்பையில் 518 நிமிடம் எதிரணிக்கு தொல்லையாக இருந்தார்.
மேலும்
-
பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது
-
இன்னும் இருக்கு இலக்குகள்: ஜூடோவில் சாதித்த சக்தி
-
நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!
-
ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களின் திறனை மதிப்பீடு செய்ய உத்தரவு