'கருணாநிதி குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் தி.மு.க., துரோகம்'

5

சென்னை: ''காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு தி.மு.க., செய்த, அனைத்து துரோகங்களுக்கும் ஒரே சாட்சி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன்,'' என, அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு தி.மு.க., செய்த துரோகத்தை பட்டியலிட்டால், ஒரு புத்தகத்தையே உருவாக்கலாம். காவிரி விவகாரம், இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதற்கு, தி.மு.க., தான் காரணம். தமிழகத்திற்கு தி.மு.க., செய்த துரோகம் அனைத்தும், தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

காவிரி விவகாரத்தில், தி.மு.க.,வும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியும் செய்த அனைத்து துரோகங்களுக்கும் ஒரே சாட்சி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அவருக்கு, தி.மு.க., செய்த அனைத்து துரோகங்களும் தெரியும்.

கருணாநிதி குடும்ப சொத்துக்கள், பெங்களூரை சுற்றியுள்ள பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுஉள்ளன. அந்த குடும்ப சொத்துக்களை காப்பாற்றவதற்காகவே, கர்நாடகாவுடன் இணக்கமாகவும், விட்டுக் கொடுத்தும் சென்றனர்.

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் ஒன்று தான் வழி. இதில் எந்த சமரசமும் கிடையாது. தற்போது, மேகதாது அணை கட்ட, எந்த அனுமதியும் கிடைக்காது, அதற்கான சட்டப் போராட்டத்தை எடுத்து வருகிறோம். பரந்துார் விமான நிலையம் விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement