வண்டலுார் -கேளம்பாக்கம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அச்சம்
வண்டலுார்:வண்டலுார் -- -கேளம்பாக்கம் இடையிலான சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வண்டலுார் சந்திப்பு முதல் கேளம்பாக்கம் இடையிலான 18.6 கி.மீ., சாலையில், 1,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
தற்போது ஆறு வழிச் சாலையாக உள்ள இந்த வழித்தடத்தின் மொத்த வாகனப் போக்குவரத்தில், 60 சதவீதம் இருசக்கர வாகனங்கள், 32 சதவீதம் ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள், 8 சதவீதம் கன ரக வாகனங்கள் பயணிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் வசிப்போர், வேலை, தொழில் நிமித்தமாக ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த சாலையே பிரதான வழித்தடமாக உள்ளது. வண்டலுார் --- கேளம்பாக்கம் சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. . இதனால், இரவு நேரத்தில், சாலை முழுதும் இருள் சூழ்ந்து, மிகுந்த அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் உலா வரும் மாடுகள் மீதும், சாலையோர பனைமரங்கள் மீதும் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வண்டலுார் - -- கேளம்பாக்கம் இடையிலான சாலையில் விபத்துகளை தவிர்க்க மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.