புதுச்சேரி போலி மருந்து விசாரணையில் 'பகீர்': சட்ட விரோத தமிழக குடோனுக்கு 'சீல்' :625 வகை மாத்திரைகள் தயாரித்தது அம்பலம்

புதுச்சேரி: புதுச்சேரி போலி மருந்து விசாரணையில், தமிழக த்தில் இயங்கி வந்த சட்ட விரோத குடோனில் மூன்று நாள் நடந்த அதிரடி சோதனையில் 625 வகையான போலி மாத்திரைகள் தயாரி த்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து, குடோனை அதிகாரிகள் நேற்று காலை பூட்டி 'சீல்' வைத்தனர்.

மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்தாண்டு ஆக்ராவில் நடத்திய சோதனையில், புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் வசிக்கும், ராஜா (எ) வள்ளியப்பன்,42; பிரபல நிறுவனங்களின் மருந்துகளை போலியாக தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருவது அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, போலி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்து உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜா உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் நாடு முழுவதும் விசாரணை மேற்கொள்ள வசதியாக, இவ்வழக்கு கடந்தாண்டு இறுதியில் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் 'கியூ' பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஆவணங்கள் இன்றி, 'பிரிகாபலின்-150' மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவை புதுச்சேரியில் தயாரித்தது தெரிய வந்தது.

அதன்பேரில், புதுச்சேரி அடுத்த குருமாம்பேட்டில் இயங்கி வந்த 'மெடினோக் ெஹல்த் கேர்'நிறுவனத்தில், கடந்த 13ம் தேதி இரவு, மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி னர். அதில், போலி மருந்து தயாரித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து, நிறுவன த்தின் உரிமையாளரான புதுச்சேரி சண்முகாபுர ம் பிரபாகரன், 52; என்பவரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரபாகரன் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை அருகே உள்ள மணவெளி கிராமத்தில், புதுச்சேரியை சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து, அதில் தனது மருந்து கம்பெனிக்கு தேவையான மூலப்பொருட்கள், பேக்கிங் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்த மாத்திரைகளை இருப்பு வைத்திருப்பது தெரியவந்தது.

மூன்று நாள் சோதனை

அதன்பேரில், தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு இணை இயக்குநர் குருபாரதி உத்தரவின்பேரில், விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் பிரதாப் தலைமையில் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ைஷலஜா, தீபா, சுரேஷ், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர், கடந்த 14ம் தேதி பூத்துறை குடோனை போலீஸ் பாதுகாப்புடன் திறந்து அதிரடி சோதனை நடத்தினர். நான்காயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த குடோனில் மருந்துகள், மூலப் பொருட்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பொருட்களை ஆய்வு செய்து, பட்டயலிடும் பணி இரவு, பகலாக நேற்று காலைவரை நடந்தது.



மூன்று நாள் நடந்த சோதனையில், அனுமதி பெறாத இந்த குடோனில் மருந்துகள் தயாரிப்பதற்கான 68 வகையான மூலப் பொருட்கள் பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் இருந்தன. மேலும், 286 வகையான மருந்துகளுக்கான பிரிண்டெட் அலுமினிய பாயில் ரோல்கள், 625 வகையான மருந்துகள் வைக்கும் சிறிய அட்டை பெட்டிகள் இருந்தது. இதனால், இந்த நிறுவனம் 625 வகையான மருந்துகள் எவ்வித அனுமதியின்றி தயாரித்திருப்பது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து குடோனை நிர்வகித்து வந்த 'மெடினோக் ெஹல்த் கேர்' நிறுவனத்தின் உரிமையாளர் பிரபாகரனின் உறவினரான சிவாபிரவீனை விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2025ம் ஆண்டு முதல் இந்த குடோனை வாடகைக்கு எடுத்து செயல்படுத்தி வருவதும், குடோனிற்கான அனுமதி எதுவும் பெறவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, அவரது முன்னிலையில் அதிகாரிகள் நேற்று காலை குடோனை பூட்டி 'சீல்' வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூன்று நாள் நடத்திய சோதனையில் சேகரித்த ஆதாரங்கள், பறிமுதல் செய்த பொருட்களின் பட்டியலை விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சமர்பித்து, 'சீல்' வைக்கப்பட்ட குடோனை தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவர அனுமதி கோரியுள்ளனர்.

குடோனை தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த பின், குடோனின் உரிமையாளர், மெடினோக் ெஹல்த்கேர் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோரை விசாரித்து, அறிக்கையை மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை இயக்குநருக்கு சமர்ப்பித்து, அவரது அனுமதி பெற்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisement