குடிநீரில் புழுக்கள்; அமைச்சரிடம் புகார்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வருகை தந்தார்.

தொடர்ந்து, வெடியசரம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் விஜயலட்சுமி திறந்து வைத்தார். இதையடுத்து அங்குள்ள அரசு பள்ளி, மற்றும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார். அப்போது அமைச்சரை சூழந்த பகுதி மக்கள், 'ஆலாம்பாளையம் டவுன் பஞ்., சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் பெரிய, பெரிய புழுக்கள் வருகின்றன. குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. குடிக்கவே முடியவில்லை' என, சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம், 'உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், அன்னை சத்யாநகர் பகுதிக்கு அமைச்சர் விஜயலட்சுமி சென்றார். அப்போது அப்பகுதி மக்கள், அமைச்சர் விஜயலட்சுமியை முற்றுகையிட்டு, இங்கு பொது கழிப்பறை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அங்கு மது விற்பனையும், மது அருந்தும் பாராக மாற்றியுள்ளனர். இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக உள்ளது என, தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர், அங்கிருந்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயல் அலுவலரிடம் பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement