எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்

மணிலா: எரிசக்தி, உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று பிலிப்பைன்ஸில் நடந்த ஆசியன் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மணிலாவில் நடந்த ஆசியன் மாநாட்டில் அவர் பேசியதாவது; எரிசக்தி, உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நாம் அனைவரும் கடல்சார் வர்த்தகத்தை பெரிதும் சார்ந்துள்ளதால், அதுவும் கவலையளிக்கும் விஷயமாக மாறக்கூடும். எனவே, இந்த விவகாரத்தல் சர்வதேச சட்டத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானது.

இந்தாண்டு ஆசியன் - இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக உள்ளது. நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, கிடைத்த நினைவூட்டலாக இது அமைகிறது. இந்தியாவும், ஆசியன் அமைப்பும் தங்களின் எதிர்கால வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் உள்ளன.

வர்த்தகம், முதலீடு, திறன், தொழில்நுட்பம், டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்தியா - ஆசியன் தொலைநோக்குத் திட்டமாக உள்ளது. ஒவ்வொரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே ஆபத்துகளைக் குறைக்கவும் மற்றும் பல்வேறு துறைகளில் விரிவாக்கம் செய்யவும் முடியும், எனக் கூறினார்.

இரு தினங்கள் நடக்கும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை இன்று சந்தித்து பேசுகிறார்.

Advertisement