கல் குவாரிகளுக்கு எதிராக 84 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே குவாரிகளுக்கு எதிராக 84 கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையில் மதுரை மாவட்ட எல்லையில் கிரஷர் குவாரியை கல் குவாரியாக மாற்றும் முயற்சி நடப்பதாக கூறி அதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயில்ராயன் கோட்டை நாடு என்று அழைக்கப்படும் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஜெயங்கொண்டநிலையில் ஒன்று கூடி குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து நாட்டுக் கூட்டம், கிராம சபை கூட்டங்களிலும் எதிர்ப்பு தீர்மானங்களை நிறைவேற்றினர். நேற்று இப்பகுதியைச் சேர்ந்த 84 கிராம மக்கள் வடவன்பட்டியில் நாட்டுக்கோவில் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டநிலை, கட்டாணிப்பட்டி, மாம்பட்டி, மல்லாக்கோட்டை, ஏரியூர், அழகமாநகரி, வடவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் செயல்பட்டு வரும் அனைத்து கல், மண்குவாரி மற்றும் கிரஷர்களை தடை செய்ய வேண்டும். ஜெயங்கொண்டநிலையில் அமைக்கப்பட்டு வரும் கல்குவாரி, கிரஷருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும், தங்கள் பகுதியில் இனிமேல் புதிதாக குவாரி, கிரஷருக்கு அனுமதி வழங்கக் கூடாது, இப்பகுதியை கனிமத்திற்காக தோண்டக்கூடாத மற்றும் குவாரியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கிராமப்பெரியவர்கள், விவசாய பிரதிநிதிகள் பேசினர். கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

Advertisement