சீமை கருவேல மரங்களிடம் சிக்கிய இ.சித்துார் குளம்
எரியோடு, ஆக.20-
இ.சித்துார் பெரிய குளத்தில் சீமை கருவேல மரங்களாக வளர்ந்திருப்பதுடன் நீர்வரத்து ஓடையில் பல இடங்களில் மண் நிரப்பி நிலங்களுக்கான வழித்தடமாக மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியான விஷயமாக உள்ளது.
பல்வேறு காலங்களில் நமது முன்னோர் கடும் பஞ்சங்களை சந்தித்தனர். பஞ்ச காலங்களில் பாதுகாப்பு பெற மழைநீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து ஆங்காங்கே ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகளை உருவாக்கினர்.
2003, 2017ல் கூட கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட்டது. இதன்பின்னர் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.
சமீப ஆண்டுகளாக பல குளங்கள் அரசு நிர்வாகம், மக்களின் அலட்சிய போக்கால் நீர்வரத்து வாய்ப்பை இழக்கும் நிலையிலும் உள்ளன. இங்கு எரியோடு இ.சித்துார் பெரிய குளத்தின் நிலை குறித்து பார்ப்போம்.
வடமதுரை ஒன்றியம் பாகாநத்தம் ஊராட்சி மாங்கோம்பை மலைகளில் உருவாகும் வரட்டாறு கொம்பேறிபட்டி வழியே எரியோடு எர்ணாசமுத்திரம் குளத்தை சென்றடைகிறது. இது நிரம்பி மறுகால் நீர் கல்குளம் சென்று பின்னர் எரியோடு குதுப்பணம்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி கிராமங்களை கடந்து இ.சித்துார் பெரிய குளத்தை சென்றடைகிறது.
இந்த ஓடையின் பல இடங்களில் மறித்து மண் கொட்டி பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது. பருவமழை பெய்து ஓடையில் நீர் பெருக்கெடுத்தாலும் தடையின்றி குளத்திற்கு சென்றடையாமல் கரைகளை சேதம் செய்து கொண்டு வேறு திசையில் பயணிக்கும் ஆபத்தும் அதிகமுள்ளது.
எனவே நீர் வழித்தடங்கள் மறைக்கப்படுவதை எவ்விதத்திலும் அரசு நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
–––
காவிரி உபரிநீர் திட்டம் அவசியம்
மணிகண்டன், ஊர் நிர்வாகி, நல்லமநாயக்கன்பட்டி:
98 ஏக்கர் பரப்புள்ள இ.சித்துார் பெரிய குளம் நிரம்பினால் சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் மறுகால் நீர் அடுத்தடுத்து அமைந்துள்ள அருப்பம்பட்டி, கெட்டியபட்டி, முனியம்பட்டி குளங்களுக்கு சென்று அங்கிருந்து குடகனாற்றில் சேரும். கடந்த பல ஆண்டுகளாக வேடசந்துார் தொகுதியில் போதிய மழை இல்லாமல் விவசாயம் பாதிப்பில் உள்ளது. எனவே காவிரி உபரிநீரை இங்குள்ள குளங்களுக்கு கொண்டுவரும் திட்டத்திற்கு முறையான அக்கறை செலுத்தி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதும் அவசியமான ஒன்று.
–––
ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தேவை
ஜெயக்குமார், மாவட்ட துணைத்தலைவர், பா.ஜ., ஊடகப்பிரிவு, நல்லமநாயக்கன்பட்டி:
பருவகால நிலை மாற்றங்களால் இனிமேல் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்படுவது சாதாரணமாக நடக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அய்யலுார் தங்கம்மாபட்டியில் 90 மி.மீ., அளவிற்கு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இதுபோன்ற கால சூழ்நிலையில் பாகாநத்தம் மலைகளில் கனமழை பெய்தால் இக்குளத்திற்கும் விரைவாக நீர் வரத்துக்கு வாய்ப்புள்ளது. எனவே நீர்வரத்து ஓடைகளில் இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும். அதனுடன் குளத்திற்குள் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை ஏலம் விட்டு அவ்வப்போது அகற்றுவதும் முக்கியம்.