இரண்டாவது வெற்றி நோக்கி இந்தியா * பெண்களுக்கான ஆசிய கோப்பையில்...

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்திய பெண்கள் அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது. இதில் எளிதாக வென்று அரையிறுதிக்கு செல்ல காத்திருக்கிறது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை 10 வது சீசன், 'டி-20' கிரிக்கெட் தொடராக துபாயில் நடக்கிறது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.
இந்திய அணி 'ஏ' பிரிவில் தாய்லாந்து, ஹாங்காங், பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே தாய்லாந்தை வென்ற இந்தியா, இன்று இரண்டாவது போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.
மீள வேண்டும்
முதல் போட்டியில் இந்திய அணி 10 ஓவரில் 101/2 என இருந்தது. எப்படியும் 200 ரன்களை எட்டும் என நம்பப்பட்டது. மாறாக, அடுத்து 29 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. கடைசியில் வெற்றி பெற்றாலும், இன்று பேட்டிங் சரிவை சரி செய்ய வேண்டும்.
துவக்கத்தில் ஷபாலி (64) நம்பிக்கை தருகிறார். ஸ்மிருதி மந்தனா, பிரதிகா சீரான பேட்டிங்கை தர வேண்டும். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மோசமான 'பார்மில்' இருந்து மீண்டால் நல்லது.
பந்து வீச்சில் 'சீனியர்' தீப்தி சர்மா, ரன் எதுவும் தராமல் 3 விக்கெட் சாய்த்து நம்பிக்கை தந்தார். தவிர நந்தனி (3 விக்.,), ஸ்ரீசரணி (2) தங்கள் பங்கிற்கு விக்கெட் வேட்டை நடத்துவது தொடரலாம்.
சவால் தருமா
ஹாங்காங் அணி முதல் போட்டியில் 6 ரன்னில் தாய்லாந்திடம் தோற்றது. இன்று இந்தியாவுக்கு எதிராக மீண்டு வர முயற்சிக்கலாம். ஆல் ரவுண்டர் காரி சான், யாஸ்மின், கேப்டன் மர்யம் பிபி பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர்.
முதல் போட்டியில் 11 ரன்னில் 4 விக்கெட் சாய்த்த மரினா, அலிசன் சியு (3) பந்துவீச்சில் நெருக்கடி தர உள்ளனர்.

இலங்கை அணி வெற்றி
துபாய்: நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, இந்தோனேஷிய அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 62/6 ரன் என திணறியது. பின் வரிசையில் நிலாக்சிகா (50) அரைசதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 20 ஓவரில் 124/7 ரன் எடுத்தது. இந்தோனேஷியா சார்பில் நி லு தேவி 3, சாங் 2 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தோனேஷிய அணிக்கு ரஹ்மாவதி (10), சுவந்தேவி (12) தவிர, மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. 18.3 ஓவரில் 49 ரன்னில் சுருண்டது. இலங்கை அணி 75 ரன்னில் வெற்றி பெற்றது.

Advertisement