உலகின் பார்வை கோவையின் மீது... உயரப்போகிறது உலகத்திறன் மையங்கள்: 2032க்குள் 200 ஆக மாறும்!
கோவை: கோவையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக திறன் மையங்களின் எண்ணிக்கை 200 ஆக உயரும்; அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், திறமையான பணியாளர்கள் உள்ளனர் என, இந்திய தொழில் கூட்டமைப்பும், இஒய் (யங் அன்ட் எர்னஸ்ட்) இன்டியா நிறுவனமும் நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
சர்வதேச அளவில் வளர்ச்சி பெற்ற பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்களது செயல்பாடுகளை அதிகரிக்க உலகின் பல முக்கிய நகரங்களில் ஜிசிசி (GCC) எனப்படும் உலக திறன் மையங்களை துவக்கி வருகின்றன. அதிக அளவில் மும்பையில் 1080 மையங்கள் உள்ளன. அடுத்தபடியாக டில்லியில் 490, புனேயில் 475 மையங்கள் உள்ளன. சென்னையில் 405 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 75 மையங்கள் உள்ளன.
இவை சிறிய மையங்களாக இருந்தாலும், பல்வேறு முக்கிய நகரங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டிவிட்டன. மெட்ரோ நகரங்களில் அதிக செலவும், போதுமான திறன்மிக்க ஆட்களை பெறுவதில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் நிலை நகரங்களான கோவையின் மீது இவற்றின் பார்வை பதிந்துள்ளது.
சர்வதேச அளவில் இயங்கி வரும் நிறுவனங்கள் தற்போது கோவையின் பக்கம் தங்களது பார்வையை திருப்பியுள்ளன. சமீபத்தில் உலகின் பிரபலமான நிறுவனங்களான டெலாய்ட், பிடபிள்யுசி, இஒய் இன்டியா, கேபிஎம், கேப்ஜெமினி, ஸ்டேட் ஸ்ட்ரீட் போன்றவை அடியெடுத்து வைத்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்களான இவை கோவையின் மீது நம்பிக்கை பெற்றுள்ளன.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள்:
பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தான். இன்னும் முழுமையடையாத நிலையில் இருந்தாலும், கட்டுமானங்கள், கட்டடங்கள் இடவசதிகள் போன்றவை தேவையான அளவிற்கு உள்ளன. குறிப்பாக உடனடியாக தேவைக்கு ஏற்ப இத்தகைய நிறுவனங்கள் அமைய 15 லட்சம் சதுரடி கட்டடங்கள் தயாராகி வருகின்றன.
தகவல் தொழில்நுட்பம் உட்பட சேவை நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளும். போக்குவரத்து வசதி, ரோடு வசதி போன்றவை, நெரிசல் குறைவான நகரமாகவும் கோவை உள்ளது. சமீபத்தில் திறக்கப்பட்ட 10 கி.மீ.,மேம்பாலம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அடுத்து வரும் மெட்ரோ ரயில் திட்டம், விரைவில், 2300 கோடி ரூபாயில் விரிவாக்கம் பெறும் விமான நிலையம், பன்னாட்டு போக்குவரத்துக்கு உதவும்.
பெரும்பாலும், ஐரோப்பா, அமெரிக்கா, அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா போன்றவைகளுடன் நேரடி விமான போக்குவரத்து ஏற்படும். உலக திறன் மைய வளர்ச்சிக்கு இவை அவசியமானது. கோவையின் தட்ப வெப்ப நிலை, நல்ல குடிநீர் போன்றவை கூடுதலான அம்சங்களாக உள்ளன.
கோவையில் உள்ள 137 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 21 ஆயிரம் பட்டதாரிகள் ஆண்டு தோறும் பட்டம் பெற்று வருகின்றனர். இவர்களின் திறன்மிக்கவர்களை தேர்வு செய்ய முடியும். பெங்களுரு போன்ற நகரங்களில் அன்றாட செலவுகளை விட கோவையில் குறைவு.
உலகத்திறன் மையங்களின் வளர்ச்சி
கடந்த ஆண்டுகளின் வளர்ச்சியை ஒப்பிட்டு செய்யப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி 2027ம் ஆண்டில் 12 சதவீதமும், 2032 வரை 27 சதவீத வளர்ச்சியையும் எட்ட வேண்டும்.
இந்திய அளவில் ஆண்டுக்கு புதிய நிறுவனங்கள் 80ம், விரிவாக்கத்தில் 40 நிறுவனங்கள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். கோவையின் பங்கு 18 சதவீதமாக இருக்க வேண்டும்.
சர்வதேச திறன்மையம் முழுமை பெறும்போது இவற்றின் வணிகம் 4000 கோடி ரூபாயாக உயரும்.
1.கோவையின் புவியியல் பரப்பளவு: 4723 சதுர கி.மீ.,
2. மக்கள் தொகை: 38 லட்சம்
3. கல்வியறிவு 84 சதவீதம்
4. மக்கள் அடர்வு: சதுர கி.மீ,க்கு 732 பேர்