வக்காளர் பட்டியலில் விடுபட்டோர் பெயரை சேர்க்க சிறப்பு இயக்கம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

புதுச்சேரி: எஸ்.ஐ.ஆரின்போது வக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோரை சேர்க்க சிறப்பு இயக்கம் துவக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் செய்தி குறிப்பு;

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நிறைவடைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சிறப்பு தீவிர திருத்தத்தின் போது அல்லது அதற்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருக்கக்கூடிய தகுதியான நபர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு இயக்கத்தை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத அனைத்து தகுதியான நபர்களையும் கண்டறிந்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எஸ்.ஐ.ஆர்-ன் போது தயாரிக்கப்பட்ட முகவரியில் இல்லாதோர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் இறந்தோர் முன்னுரிமை பட்டியலை வீடு வீடாக சென்று முன்னுரிமை அடிப்படையில் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் முகவரியில் இல்லாதோர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் இறந்தோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களின் தற்போதைய நிலையை அவர்களது முகவரிகளில் நேரில் சரிபார்த்து, தகுதியான வாக்காளரின் பெயர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வார்கள்.

மறுசரிபார்ப்பின்போது, முகவரியில் இல்லாதோர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர் சம்மந்தப்பட்ட முகவரியில் வசித்து வரும் தகுதியான வாக்காளர் எனத் தெரியவந்தால், அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக, நடைமுறையில் உள்ள தொடர் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு முறையின்படி படிவம் 6 சமர்ப்பிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலர் உரிய உதவியை வழங்குவார்.

புதுச்சேரியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் முகவரியில் இல்லாதோர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் இறந்தோர் பட்டியலின் வீடு வீடான மறுசரிபார்ப்பு பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, 17.10.2026-க்குள் நிறைவு செய்யப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement