தொடர் விடுமுறை எதிரொலி சிக்னலில் வாகனங்கள் அணிவகுப்பு

புதுச்சேரி: தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது.

வார விடுமுறை என்றாலே, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், தசரா பண்டிகை தொடர் விடுமுறையால் வடமாநிலங்களில் இருந்தும் கூடுதல் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைக்குகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி வருகின்றனர். இதனால், நகரம் முழுதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, புதுச்சேரியின் ஒயிட் டவுன் பகுதி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. புதுச்சேரியின் முக்கிய நுழைவுப் பகுதிகளில் ஒன்றான இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல் பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

சுற்றுலா வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கேற்ற அடிப்படை போக்குவரத்து வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும்.

Advertisement