வீட்டின் முன் மரக்கிளை, கழிவு மண் தட்டிக்கேட்ட டாக்டரை தாக்க முயற்சி: திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அராஜகம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட, 47வது வார்டு, கேசவ நகர் பகுதிகளில், மரக்கிளைகளை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

அப்போது, வெட்டப்பட்ட மரக்கிளைகளை, அப்பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவரின் வீட்டின் முன், ‘டிரான்ஸ்பார்மர்’ கீழே குவித்து வைத்துள்ளனர். தங்கள் வீட்டின் முன், கிளைகளை போட வேண்டாம் என, டாக்டரின் மனைவி கூறியுள்ளார்.

அங்கு வந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் சதாம் உசேன் ஆகியோர், கல்லுாரி முதல்வரான டாக்டர் மனைவியிடம், ‘அப்படி தான் போடுவோம்; உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்’ என, ஒருமையில் பேசியுள்ளனர்.

சரவணன், சதாம் உசேன் ஆகியோர் டாக்டரிடமும் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். அப்போது டாக்டர், ‘மரியாதை குறைவாக பேசினால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வேன்’ என, கூறியுள்ளார்.

அதற்கு சரவணன், யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யலாம் எனக்கூறி, மேலும் தரக்குறைவாக பேசியுள்ளார்.

அவர்களின் அராஜக போக்கை, டாக்டர் தன் மொபைல் போனில் வீடியோ எடுக்க முயற்சிக்க, மொபைல் போனை கீழே தட்டிவிட்ட சரவணன், மரக்கிளைகள் அறுக்கும் ரம்பத்தால் டாக்டரை தாக்க முயன்றுள்ளார்.

அவர்களிடம் இருந்து டாக்டரை, அவரது மனைவி மீட்டுள்ளார்.

இதுகுறித்து, டாக்டரின் மனைவி, முதல்வரின் தனி பிரிவுக்கும், மாநகராட்சி கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோரிடமும் புகார் அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

மறுநாள் அப்பகுதியில் மழைநீர் வடிகாலை துார்வாரும் பணி நடந்தது. துார்வாரிய மண்ணை, டாக்டர் வீட்டின் முன் கொட்டி வைத்து, மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் அராஜகம் செய்துள்ளனர்.

சரவணன் போன்ற அதிகாரிகளின் செயல், முதல்வர் விஜயின் வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு தான் அவப்பெயரை ஏற்படுத்தும் எனவும், இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறாக, அராஜகத்தில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement