கெங்குவார்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு :ரோடு மறியல்

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டியில் 20 நாட்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் இரு இடங்களில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. 13 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு பட்டிமந்தை, நாகர்வலை மற்றும் மஞ்சளாற்று பகுதி கிணறுகளிலிருந்து மின் மோட்டார் மூலம் நீரை எடுத்து 5 க்கும் அதிகமான மேல்நிலைத்தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கிணறுகளில் நீர் மட்டம் குறைவால் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் பேரூராட்சி அலுவலகம் எதிரே கெங்குவார்பட்டி –- ஜி.கல்லுப்பட்டி ரோட்டில் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகம், போலீசார் கண்டு கொள்ளததால் அங்கிருந்து காட்ரோடு- கொடைக்கானல் ரோடு கம்பெனி பிரிவு அருகே மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கொடைக்கானல் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி, தேவதானப்பட்டி போலீசார் ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.

Advertisement