மஹா., துணை முதல்வருக்கு எதிராக வெளியான ஆடியோவால் பரபரப்பு: ரூ.500 கோடி கொடுத்ததாக குற்றச்சாட்டு

9

மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த, மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தை பலவீனப்படுத்த, போராட்டக்குழு தலைவர் மனோஜ் ஜராங்கே பாட்டீலுக்கு, சிவசேனா கட்சியை சேர்ந்த மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 500 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக வெளியான, 'ஆடியோ' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2024 சட்டசபை தேர்தலுக்கு முன், அம்மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான போராட்டம் தீவிரமடைந்தது.

போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில், 500 கோடி ரூபாய் வரை பேரம் நடந்ததாக ஒரு பெண் பேசும் ஆடியோ பதிவை, மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக் குழு தலைவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் நேற்று வெளியிட்டார்.

அதில், 'மனோஜ் ஜராங்கேவிடம் ஒப்படைக்கும்படி, 500 கோடி ரூபாய் பணத்தை பா.ஜ., தரப்பு தற்போதைய துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கியது. அவரது மகனும், லோக்சபா எம்.பி.,யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலம், ஜராங்கேவிடம் அந்த பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மனோஜ் ஜராங்கே இந்த ஆடியோவை வெளியிட்டு, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீது குற்றஞ்சாட்டினார். அப்போது அவர் கூறியதாவது: நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தை கைவிடவும் இல்லை. என் அரசியல் செல்வாக்கை குறைக்கவும், மராத்தா இடஒதுக்கீடு இயக்கத்தை பிளவுப்படுத்தவும் தீட்டப்பட்ட சதியை தான் இந்த ஆடியோ பதிவு நிரூபிக்கிறது. இது குறித்து பிரதமர் மோடியும், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிசும் உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மனோஜ் ஜராங்கே சுமத்திய இந்த குற்றச்சாட்டுகளை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''நான் பா.ஜ.,விடம் இருந்து 500 கோடி ரூபாய் வாங்கவும் இல்லை; அதை யாரிடமும் தரவும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் அதை அவர் சமர்ப்பிக்கட்டும். எந்தவொரு விசாரணையையும் சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன்,'' என்றார்.

Advertisement