பேரணிக்கு 1000 பேர் வர வேண்டும்: காங்., மேலிடம் நெருக்கடியால் தவிக்கும் தமிழக நிர்வாகிகள்

7

- நமது நிருபர் -

'டில்லியில் அடுத்த மாதம், 'இண்டி' கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணியில், தமிழக காங்கிரசிலிருந்து ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என, தமிழக காங்., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி மேலிடம் நெருக்கடி தருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து, நவம்பர், 1ம் தேதி டில்லியில், 'இண்டி' கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டில்லி ராம் லீலா மைதானத்தில் நடக்கும் பேரணியில், தமிழகத்திலிருந்து ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்த பட்சம், 50 தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என, டில்லி மேலிடம் சுற்றறிக்கை வாயிலாக, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல், காங்., நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: டில்லிக்கு ஆட்களை அழைத்துச் செல்ல, ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை. தனியாக ஒரு பெட்டியை முன்பதிவு செய்ய, ரயில்வே துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால், விமானத்தில், டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமான டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது. பொருளாதார வசதி படைத்த மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு கட்டணம் குறித்த கவலை இல்லை.

ஆனால், மற்ற நிர்வாகிகளுக்கு இது பிரச்னையே. தங்களுடன் தொண்டர்கள், 50 பேரை அழைத்து வர வேண்டும். அவர்களுக்கான டிக்கெட் செலவு, ஓட்டலில் தங்கும் செலவு, உணவுச் செலவை எல்லாம், மாவட்ட தலைவர்கள் ஏற்க வேண்டும் என்பது சரியாக இல்லை.

இதனால், பேரணியில் பங்கேற்க மாவட்ட தலைவர்கள் சிலர் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து டில்லியில் போராட்டம் நடத்த, டில்லி மேலிடம் அழைப்பதால், மாவட்ட தலைவர்கள் பதவியை ஏன் வாங்கினோம் என, சிலர் புலம்பி தவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement