வால்பாறை பயணத்தை தவிர்க்க அறிவுரை: அபாயகரமான பகுதிகளில் கவனம் தேவை

பொள்ளாச்சி: ‘‘வால்பாறை மலைப்பாதையில் மழைக்காலங்களில் மண் சரிவு, பாறைகள் விழ வாய்ப்புகள் உள்ளது. எனவே, சுற்றுலா பயணியர், பயணத்தை தவிர்க்க வேண்டும்,’’ என பொள்ளாச்சி சப் – கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

பொள்ளாச்சி – வால்பாறை ரோட்டில், ஆழியாறில் இருந்து, வால்பாறை மலைப்பகுதிக்கு செல்லும் வழியில், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இயற்கை அழகை மிகுந்த இந்த ரோட்டில் ஆபத்துகளும் நிறைந்துள்ளன.

வால்பாறை ரோட்டில், 40 வளைவுகள் இருந்தாலும், ஆழியாறு – அட்டக்கட்டி வரை உள்ள, 16 கொண்டைஊசி வளைவுகள் ஆபத்தானவையாக உள்ளன. இங்கு, பாறைகள் அதிகளவு உள்ளதுடன், ரோடுகளும் குறுகலாக உள்ளன. அட்டக்கட்டிக்கு மேல் உள்ள வளைவுகள், தேயிலை தோட்டங்களாக மட்டுமே உள்ளன.

மலைப்பாதையில், 2, 3, 9, 13 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் அவ்வப்போது, மண் சரிவு, பாறை சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. பாறைகளின் நடுவே வளர்ந்துள்ள மரங்களின் வேர்களால், மழைக்காலங்களில் பாறைகள் உடைந்து ரோட்டில் விழுகின்றன.

இரு நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் பாறை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், ரோட்டை சீரமைத்து போக்குவரத்து இயக்கப்பட்டது.

மேலும், ஆபத்தை உணராமல் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. சமவெளியில் இயக்குவது போன்று வாகனங்களை இயக்குவோரால் விபத்துகள் சர்வசாதரணமாக நடக்கிறது.

காடம்பாறை, காண்டூர் கால்வாய், ஒட்டபாலம், சின்னார்பதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன.

மலைப்பகுதியில் மழைப்பொழிவு இருக்கும் போது, ரோடுகளில், ‘கிரிப்’ கிடைக்காது; பாறை கற்கள் சரிந்து விழ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பாக செல்ல வேண்டும். மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

மலையில் இருந்து இறங்கும் வாகனங்கள், மலையேறும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்.

ஒவ்வொரு வளைவுகள் திரும்பும் போதும், ஹாரன் சப்தம் எழுப்பி எச்சரிக்கை செய்து, மற்ற வாகனங்கள் வருகிறதா என பார்த்து பாதுகாப்பாக திருப்ப வேண்டும் என போலீசார் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் ஆங்காங்கே பாறைகள் விழும் பகுதி கவனமாக செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை காலங்களில் மலைப்பாதைகளில் பயணங்களை தவிர்த்தால் விபத்துகளை தவிர்க்கலாம், என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் வால்பாறை மலைப்பாதையில் பயணிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பொள்ளாச்சி சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி கூறியதாவது:

பொள்ளாச்சி – வால்பாறை ரோடு, பாறைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால், மழை காலங்களில் மண் சரிவு, பாறைகள் விழுதல் போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது, பெரிய பாறை விழுந்தது அகற்றப்பட்டு உடனடியாக போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

இந்த ரோட்டில் விபத்துகளை தவிர்க்க முன்னேற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மலைப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும். பதட்டம், வேகம் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும். மலைப்பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.

Advertisement