சொந்த ஆதாயத்திற்கு சட்டத்தை பயன்படுத்தக்கூடாது வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி அறிவுரை
சென்னை: ‘‘இளம் வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்திறன் மற்றும் சட்ட அறிவை, சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தக்கூடாது,’’ என, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று (அக்.,25) நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசியதாவது:
சமூக மாற்றத்தில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது. இன்றைய சூழலில், இளம் வழக்கறிஞர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை, நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், தற்போது வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம், புதிய வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், கிராமங்களை சார்ந்த சமூகமாக இருந்த நமது வாழ்க்கை முறை, தற்போது நகர மயமாகி உள்ளது. இதனால், வழக்குகளின் தன்மையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னர் கிராமங்களில், ‘சிவில்’ வழக்குகள் அதிகமாக இருந்தன. தற்போது, சமூகத்தின் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், வணிகம், வர்த்தகப் பரிவர்த்தனைகள், பணம் கொடுத்தல் வாங்கல் போன்ற வழக்குகள் அதிகரித்துள்ளன. ‘சைபர்’ குற்றங்கள் மற்றும் திருமணம் சார்ந்த வழக்குகளும் அதிகரித்துள்ளன.
எனவே, சமூகத்தின் வளர்ச்சி, பொருளாதார சூழலுக்கு ஏற்ப, எதிர்காலத்தில் எந்த வகையான வழக்குகள் உருவாகும் என்பதை, இளம் வழக்கறிஞர்கள் அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். தற்போது, ‘ஏஐ’ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வாயிலாக, வழக்குகள் தொடர்பான தகவல்கள் மற்றும் தீர்ப்புகளை, ஒரு நிமிடத்தில் பெற முடிகிறது.
இது எதிர்காலத்தில், சட்டத்துறையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை கணிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே, அதற்கேற்ப வழக்கறிஞர்கள் தங்கள் வாதாடும் திறன் மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல, இளம் வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தர்மத்தை பாதுகாக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்திறமையையும், சட்ட அறிவையும் மற்றவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக பயன்படுத்த வேண்டும். தங்களின் தனிப்பட்ட பிரச்னை மற்றும் சொந்த ஆதாயத்திற்காக, தவறாக பயன்படுத்தக்கூடாது. இத்துறையின் நற்பெயரை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அனிதா சுமந்த், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கதிரவன், துணைத் தலைவர் பாலமுருகன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் அமல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!