வரும் கோடை காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும் வாரியம் தகவல்

சென்னை: ‘தமிழகத்தில் வரும், 2027 கோடை காலத்தில், தினமும், 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை, மின் பற்றாக்குறை ஏற்படும்’ என, மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.

தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இதுவே, கோடை காலத்தில் 20,000 மெகாவாட்டை தாண்டுகிறது. இந்த ஆண்டு கோடையில், 21,000 மெகாவாட்டாக அதிகரித்தது. கடந்த ஜூலை 14ல் மின் தேவை, 21,714 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியது. கோடை காலம் முடிந்தும் கடந்த மாதம் வரை, வெயில் கடுமையாக இருந்தது. இதனால், தினசரி மின் தேவை, 20,500 மெகா வாட்டாக இருந்தது.

இதை பூர்த்தி செய்ய, மின்சாரம் கிடைக்காததால், 2,000 மெகா வாட், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், வெளிச்சந்தையில், குறுகிய கால அடிப்படையில், மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்தது. ஒரு யூனிட் விலை, 35 ரூபாய் அளவிற்கு இருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வரும் கோடை காலத்தில் மின் தேவை, 23,672 மெகா வாட்டாக உயரும். இதை பூர்த்தி செய்வதில், தினமும் உச்ச நேரமான காலை மற்றும் மாலை, 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை, மின்பற்றாக்குறை ஏற்படும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், குறுகிய கால ஒப்பந்தங்களின் கீழ், 3,200 மெகாவாட், நீண்ட கால அடிப்படையில், 1,500 மெகாவாட் மின்சாரத்தையும் கொள்முதல் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. குறுகிய காலம் என்பது ஒரு நாள் முதல் ஓராண்டு வரை, நீண்ட காலம் என்பது ஐந்து ஆண்டுகள் முதல், 15 ஆண்டுகள் வரையாகும்.

Advertisement