பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்

13

மதுரை: தமிழகத்தில் பா.ஜ.,வின் 'சி' பிளான் எடுபடாது என, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி: த.வெ.க., - காங்., கூட்டணி சகோதரத்துவமானது. ராகுல்- விஜய் இடையே, சகோதரத்துவ உறவு நீண்ட நாள் நீடிக்கும்.

சட்டசபை தேர்தலுக்கு பின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்ததாக, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறுகிறார். பா.ஜ.,வுக்கு எதிரான நிலையில் திருமாவளவன் தெளிவாக உள்ளார். தமிழகத்தில், குழப்பங்களை ஏற்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் தினகரனை வைத்து, தற்போது, 'சி' பிளானை, பா.ஜ., செயல்படுத்துகிறது. அண்ணாமலைக்கு புது முகமூடி கொடுத்து, கட்சியை விட்டு வெளியேற செய்தது. அவர், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே பேசுகிறார்.

பா.ஜ.,வின் 'சி' பிளானில், ஒரு நடிகரையும் தயார் செய்கிறது. ரசிகர் கூட்டத்துடன், பா.ஜ.,வில் அவர் சேரவுள்ளார். இதற்கான 'ரிமோட் கன்ட்ரோல்' மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உள்ளது. தமிழகத்தில் பா.ஜ., திட்டம் ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement