தமிழகம் முழுதும் ஆர்.எஸ்.எஸ்., பேரணி: ஏராளமானோர் பங்கேற்பு

6

சென்னை: ''பாரத தேசத்தையும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் தோற்கடிக்க, பல சக்திகள் சதி செய்து வருகின்றன. ஆனால், அவர்களும் இந்த அமைப்பை வரவேற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை,'' என, ஆர்.எஸ்.எஸ்., தென்பாரத செயற்குழு உறுப்பினர் ஆனந்த் ரகுநாதன் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடங்கிய விஜயதசமி நாளையொட்டியும், அதன், 100 ஆண்டுகள் நிறைவை ஒட்டியும், தமிழகம் முழுதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.

மலர் துாவி வரவேற்பு:



சென்னை எழும்பூர், திருவொற்றியூர், கொளத்துார், கொரட்டூர், அய்யப்பன்தாங்கல், மேடவாக்கம், குரோம்பேட்டை உட்பட தமிழகம் முழுதும், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் என, 45க்கும் மேற்பட்ட இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புகள் நடந்தன. சில இடங்களில் கொட்டும் மழையிலும் பேரணி நடந்தது. அணிவகுப்பில் பங்கேற்றவர்களை மக்கள் மலர் துாவி வரவேற்றனர்.

சென்னை, எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே, நேற்று மாலை 4:00 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு தொடங்கி, ராஜரத்தினம் மைதானம் சென்று நிறைவடைந்தது. அணிவகுப்பை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ் ஆசிரியர், சுவாமி அபவர்கானந்த மஹராஜ் பங்கேற்று ஆசியுரை வழங்கினார்.

ஆர்.எஸ்.எஸ்., தென்பாரத செயற்குழு உறுப்பினர் ஆனந்த் ரகுநாதன் பேசியதாவது: பல காலமாக ஒரே சிந்தனையோடு, ஒரே கலாசாரத்தோடு இணைந்து வாழக்கூடிய ஒரு சமுதாயம், 5,000 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்து வருகிறது. அந்த சமுதாயத்திற்கு வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு பெயர் கொடுக்கின்றனர்.

ஆனால், உலகத்தால் இன்று அறியப்பட்டிருக்க கூடிய பெயர், 'ஹிந்து!' பாரதம் உலகிற்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டுமெனில், ஹிந்துக்கள் எழ வேண்டும்; ஒன்றுபட வேண்டும்.

முன்னேற்ற வேண்டும்:



இதுதான் இந்த சங்கத்தை தொடங்கியவருக்கு இருந்த சிந்தனை. ஆர்.எஸ்.எஸ்., பெயருக்காக வேலை பார்க்கும் சங்கம் அல்ல. இந்த நாட்டை அனைத்து துறையிலும் முன்னேற்ற வேண்டும். அதன் வாயிலாக உலகின் குருவாய் இந்த நாடு மாற வேண்டும் என்ற சிந்தனையோடு தொடங்கப்பட்டது, இந்த புனிதமாக இயக்கம்; தொடங்கிய நாள் முதல் இன்று வரை, 100 ஆண்டுகளாக, எந்த லட்சியத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதே லட்சியத்துடன் தான் செயல்பட்டு வருகிறது.

தேசம் குறித்தோ, ஹிந்து மதம் குறித்தோ, தவறாகப் பேசினால் அடிவிழும். அதாவது, அரசியல் ரீதியான அடிவிழும். சமீபத்தில் இவ்வாறு தவறாக பேசியவர்கள் கூட, நாங்களும் ஹிந்துக்கள் தான்; எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர்.

ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு தடை விதித்தவர்களே, பின்னாளில் வரவேற்றனர். துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் மட்டும், கூவம் ஓரமாக, ஒதுக்குபுறமாக ஒரு இடம் தந்து அனுமதி அளித்துள்ளனர். நாட்டையும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் தோற்கடிக்கும் நோக்கில், பல சக்திகள் சதி செய்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement