கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி 5 பேருக்கு பரோல்: அத்வானியை குறிவைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் சலுகை ஏன்?

54

-நமது சிறப்பு நிருபர்-

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, கோவையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நகரில் பல இடங்களில் நிகழ்ந்தன. பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நடத்த இருந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்னதாக நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

60 நாள் பரோல்

தீவிர விசாரணை நடத்தி பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் 22 பேர் இருக்கின்றனர். இவர்களில் முகமது அன்சாரி (58), முகமது அலி (52), மொனப்பா என்ற முகமது ஹசன் (46), முகமது அஜாம் மற்றும் நவாப் கான் ஆகிய 5 பேருக்கு முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு 60 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது

எழும் கேள்விகள்!

இவர்கள் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா அமைப்புடன் தொடர்புடையவர்கள், சிலர் அல்-உம்மா தலைவரும் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியுமான எஸ்.ஏ. பாஷாவின் உறவினர்கள் என்பதை குறிந்து அரசு பரோல் வழங்கி இருப்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பரோலில் விடுதலை பெற்ற உடனே குற்றவாளிகள் 5 பேரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை சந்தித்தது பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

* அத்வானியை குறிவைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் சலுகை ஏன்?

* 60 நாட்கள் பரோல் வழங்கியது ஏன்? இந்த முடிவுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறையில் இருக்கும் மீதமுள்ள குற்றவாளிகள் 18 பேரையும் விடுதலை செய்ய ஜவாஹிருல்லா வலியுறுத்தி வருவதுடன், மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரியும் வரும் நிலையில், அரசின் நிலைப்பாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரோலை ரத்து செய்யுங்கள்!

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, தவெக அரசு குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கி இருக்கிறது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று தமிழக பாஜ தலைவர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் இந்த பரோலை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement