பர்லியார் நிலச்சரிவில் அரசு பஸ் சிக்கியது எப்படி? நெஞ்சை உருக்கும் தகவல்கள்!
மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில், அக்., 23 நள்ளிரவில் கனமழை பெய்தது. பர்லியார் பகுதியில் ஒரே நாளில், 25 செ.மீ., மற்றும் கீழ் கோத்தகிரியில், 20 செ.மீ., மழை பதிவானது. மழை காரணமாக, குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 11 இடங்கள், கோத்தகிரி மலைப்பாதையில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
பர்லியாரில் நடந்த நிலச்சரிவில், அரசு பேருந்து மீது பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததில், குன்னுார் துாரட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜனகராஜ், 47, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்டக்டர் கேசவன் காயங்களுடன் மீட்கப்பட்டார். தற்போது பர்லியார் பகுதியில், நள்ளிரவில் அரங்கேறிய நிலச்சரிவு விபத்தில், பஸ் சிக்கியது குறித்த பின்னணி தகவல்கள், நெஞ்சை உருக வைக்கின்றன.
நள்ளிரவு பயணம்
ஊட்டி பஸ் நிலையத்திலிருந்து, மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ், அக்., 23 இரவு, 10:30 மணியளவில் புறப்பட்டது. ஓட்டுநர் ஜனகராஜ், நடத்துநர் கேசவன் ஆகியோருடன் மேட்டுப்பாளையம் செல்ல, ஏழு பயணியர் மட்டுமே இருந்தனர். இரவு, 12:30 மணியளவில் குன்னுார் அருகே உள்ள புதுக்காடு பகுதியில் பஸ் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்க டயர் பஞ்சரானது.
பயணியரை காத்த பஞ்சர்
நள்ளிரவு நேரம் என்பதால், பயணியரின் பாதுகாப்பு கருதி, கேசவன் சாமர்த்தியமாக செயல்பட்டு, அவ்வழியாக வந்த மற்றொரு அரசு பஸ்சில், ஏழு பயணியரையும் ஏற்றி, மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைத்தார். அதன்பின், பஸ்சை பழுதுபார்ப்பதற்காக, குன்னுார் பணிமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பஞ்சர் ஒட்டியபின், பஸ் மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்டது.
மரண பொறி
நள்ளிரவு, 2:00 மணியளவில் பர்லியார் பகுதியை பஸ் நெருங்கியபோது, கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில், பஸ் மீது பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. பஸ் சிக்கிய பகுதிக்கு, மேல் பகுதியில், இரண்டு இடங்களிலும், கீழ் பகுதியில், மூன்று இடங்களிலும் என, அடுத்தடுத்து நிலச் சரிவுகள் ஏற்பட்டதால், அந்த பகுதியே ஒட்டுமொத்தமாக துண்டிக்கப்பட்டது. இதனால் பஸ், மண் சரிவுகளில் சிக்கிய விஷயம், வெளி உலகிற்கு உடனே தெரியாமல் போனது.
கீழ் பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள், நிலச்சரிவு ஏற்பட்டது பற்றி அளித்த தகவலில், நள்ளிரவு, 3:30 மணியளவில் மேட்டுப்பாளையம் போலீசார், தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஒருங்கிணைந்து, 'பொக்லைன்' இயந்திரங்கள், மரம் வெட்டும் கருவிகளுடன் களமிறங்கினர். மழை, இருள் என பாராமல் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வரை, மூன்று இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை சீரமைத்து கொண்டே முன்னேறினர்.
மீட்பு பணி
கடும் போராட்டத்திற்கு பின் காலை, 6:15 மணியளவில், பர்லியார் பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர், மண் மற்றும் பாறைகளுக்கு நடுவே பஸ் ஒன்று நசுங்கி கிடப்பதை கண்டனர். உடனடியாக செயல்பட்டு, பஸ் பின்பகுதியில் சிக்கியிருந்த கேசவனை காயத்துடன் மீட்டனர். முன்பகுதியில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஜனகராஜ் உயிரிழந்து கிடந்தார். பஸ்சில் பயணியர் யாரும் இல்லாததால், மேலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கேசவன் கூறுகையில், ''நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு கொஞ்சம் தள்ளி, இரும்பு பாலம் பகுதியில், மரம் ஒன்று விழுந்து கிடந்ததால் ஜனகராஜ், பஸ்சை பின்நோக்கி எடுத்தார். ''பலத்த மழை பெய்ததால், தொடர்ந்து பஸ்சை இயக்க முடியாது என நினைத்து, சாலையின் ஓரமாக நிறுத்த முயன்றோம். அப்போது, பயங்கர சத்தத்துடன், மண் சரிந்து பஸ்சை மூடியது. அடுத்து என்ன நடந்தது என தெரியவில்லை,'' என்றார்.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!