அதிகாலை பனி மூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை: திருவாடானை பகுதியில் புகை போல் மாறிய பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகளும், மக்களும் சிரமப்பட்டனர். திருவாடானை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகாலை நேரங்களில் புகை மண்டலம் போல் அடர்ந்த பனி சூழ்ந்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் சில அடி துாரத்திற்கு அப்பால் தெரியாத அளவுக்கு பனி மூட்டமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்கின்றனர்.

விபத்து அபாயத்தை தவிர்க்க வாகனங்களை மிகவும் மெதுவாக இயக்கி வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். துாரத்தில் இருந்து பார்ப்பதற்கு இந்த பனி மூட்டம் புகை போல் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர். பனி அதிகமாக இருந்தாலும் குளிர் இல்லை.

Advertisement