டாக்டரை கேளுங்கள்

பக்கவாதம் எந்த வயதினருக்கு வரும்

-கருணாகரன்,சிவகங்கை.

பக்கவாதம் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை வரக்கூடும். பொதுவாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதாலோ அல்லது ரத்த உறைவு காரணமாகவோ அடைப்பு ஏற்படுவதால் அல்லது மூளையில் ரத்தக் குழாய் திடீரென வெடித்து ரத்தக் கசிவு ஏற்படுவதால் பக்கவாதம் வரும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கம், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக பக்கவாதம் வரும்.

இவற்றை தடுக்க ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள் , காய்கறி, கீரை, முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி நடைபயிற்சி, எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். புகை, மதுவை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ரால் அளவையும் சரியாக பராமரிக்க வேண்டும். பொதுவாக திடீரென தலைச்சுற்றல், பார்வைக் குறைபாடு, முகத்தின் ஒரு பகுதி கோணலாக மாறுதல் அல்லது சிரிக்கும் போது வாய் ஒருபுறம் இழுத்தல், கை, காலைத் துாக்க முடியாமல் பலவீனமடைதல், பேசும்போது நாக்கு குளறுதல் உள்ளிட்ட அறிகுறி தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

டாக்டர் ரமணன்நரம்பியல் நிபுணர்அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைசிவகங்கை.

Advertisement