இருவரை கொல்ல முயன்ற வழக்கில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
சென்னை: முன்விரோதம் காரணமாக இருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், ஐந்து பேருக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர், மேற்கு எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி, 25. தன் நண்பர் பாண்டியராஜனுடன், 2010 அக்., 10ம் தேதி இரவு, திருமங்கலம் 13வது சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல், 25, சீதாராமன், 27, முரளி, 26, செல்வகுமார், 22, தயாநிதி, 25, சுரேஷ், 24, ஆகிய ஆறு பேர், முன்விரோதம் காரணமாக இருவரையும் தாக்கினர். புகாரின்படி, திருமங்கலம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஆறு பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட செல்வகுமார், 2024 மே 14ல் உயிரிழந்தார்.
விசாரணை முடிவில், சாமுவேல், சீதாராமன், முரளி, தயாநிதி, சுரேஷ் ஆகிய ஐந்து பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.