‘இண்டி’ கூட்டணியில் ஒற்றுமை இல்லை: ஐக்கிய ஜனதா தளம்
புதுடில்லி: ‘இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே பொதுவான பிரச்னைகளில் ஒருமித்த கருத்து இல்லை. தேர்தலிலும் ஒன்றாக போட்டியிடுவதில்லை’ என, ஐக்கிய ஜனதா தளம் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறியதாவது: இண்டி கூட்டணி கட்சிகள் மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்டுள்ளன.
டில்லியில் லோக்சபா தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட்டன. ஆனால் சட்டசபை தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்டன. கேரளாவிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடது ஜனநாயக முன்னணியும் எதிரெதிராகப் போட்டியிடுகின்றன.
கூட்டணிக் கட்சிகளிடையே பிரச்னைகளில் ஒருமித்த கருத்தும் இல்லை; ஒன்றாகத் தேர்தலைச் சந்திக்கும் விருப்பமும் இல்லை. இத்தகைய சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இண்டி கூட்டணி மாற்று என கூறிக்கொள்கின்றனர். இதை மக்கள் ஏற்கவில்லை.
மேலும், ராம்லீலா மைதானத்தில் இவர்கள் நடத்திய போராட்டமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 10 லட்சம் பேர் பங்கேற்பர் எனக் கூறப்பட்ட நிலையில், 40 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.