பிரிட்டன் கோர்ட் வழங்கிய விவாகரத்து செல்லாது இருதார மண வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

9

புதுடில்லி: 'நம் நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக, 'மீட்க முடியாத திருமண உறவு' என்ற அடிப்படையில் வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கும் விவாகரத்து தீர்ப்புகள், இங்கு செல்லுபடியாகாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் சட்டெனப்பள்ளியை சேர்ந்த தம்பதிக்கு 2003, ஏப்., 18ல் ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது. உஸ்மானியா மருத்துவ கல்லுாரியில் கணவர் மருத்துவ மேற்படிப்பு முடிக்கும் வரை இருவரும் ஹைதராபாதில் வசித்தனர். பின்னர், பணி நிமித்தமாக கணவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு 2005ல் சென்றார். அவருடன் மனைவியும் சென்ற நிலையில், மகப்பேறு காலத்திற்காக 2007, ஆகஸ்டில் சட்டெனப்பள்ளியில் உள்ள தாய் வீட்டிற்கு திரும்பினார்.

ஆனால், அதன் பின் பலமுறை அழைத்தும், மனைவி வராததால், குண்டூர் மாவட்ட நீதிமன்றத்தில் கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின் பிரிட்டன் குடியுரிமை கிடைத்ததும், கேம்பிரிட்ஜ் கவுன்டி நீதிமன்றத்தில் மனைவிக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், 'மீட்க முடியாத திருமண உறவு' என்ற அடிப்படையில், கடந்த 2014ல் விவாகரத்து வழங்கியது. அதன்பின், பிரிட்டனின் நார்போக்கில் வசித்த கணவர், வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு பின், குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டெனப்பள்ளி நகர போலீஸ் ஸ்டேஷனில் கணவருக்கு எதிராக மனைவி புகார் அளித்தார். அதில், இருதார மணம், சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கணவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து கணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நம் நாட்டில் பின்பற்றப்படும் திருமண சட்டங்களுக்கு புறம்பாக, வெளிநாட்டு நீதிமன்றம் விவாகரத்து வழங்கி இருக்கிறது. சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத காரணத்தின் அடிப்படையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தீர்ப்புகள், நம் நாட்டில் அமல்படுத்துவதற்கான சிவில் நடைமுறைச் சட்டப் பிரிவு 13ன் நிபந்தனைகளை மீறுவதாகவும் உள்ளது.

திருமண உறவின் சட்டப்பூர்வ நிலையை, வசதியான நீதிமன்றத்தை தேர்வு செய்து, அதன் மூலம் பெறப்படும் இத்தகைய தீர்ப்புகள் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. வெளிநாட்டு விவாகரத்து செல்லாது என்பதால், கணவர் மீ து சுமத்தப்பட்டுள்ள இருதார மண வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement