‘மிஷன் 2036’ திட்டத்தில் செயற்கை ஓடுதளம் கைகூடுமா?
பின்னலாடை ஏற்றுமதி மூலம் உலக வரைபடத்தில் இடம் பிடித்துள்ள திருப்பூர் மாவட்டம், விளையாட்டுத் துறையில் போதிய நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி தவித்து வருகிறது. குறிப்பாக, தடகள வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான செயற்கை ஓடுதளம் (சிந்தெடிக் டிராக்) அமைக்கும் திட்டம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மண் தரையில் பயிற்சி பெற்று, போட்டியின்போது செயற்கை ஓடுதளத்தில் ஓடுவதால் வீரர்களின் திறன் பாதிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். சிறிய மாவட்டங்களில்கூட செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக வீரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2018-–19-ம் ஆண்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பில் செயற்கை ஓடுதளம் உள்ளிட்ட நவீன விளையாட்டு வளாகம் அமைக்கத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், திட்ட மதிப்பீடு ரூ.2 கோடியாகக் குறைக்கப்பட்டதால், செயற்கை ஓடுதளம் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. தற்போது அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், வீரர்களின் கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பயிற்சி பெற முடிவதில்லை
ராஜேந்திரன், செயலாளர், திருப்பூர் மாஸ்டர்ஸ் தடகளச் சங்கம்:
நமது மாவட்டத்தில் திறமையான தடகள வீரர்கள் ஏராளமாக உள்ளனர். மண் ஓடுதளத்தில் பயிற்சி எடுத்துவிட்டு, போட்டிக்குச் செல்லும்போது திடீரென செயற்கை ஓடுதளத்தில் ஓடுவதால் வீரர்களின் தசைகள் ஒத்துழைப்பதில்லை. இதனால் ஓடி முடிக்கும் நேரம் அதிகரிக்கிறது. வேகமாக ஓட முயன்றால் காயம் ஏற்படுகிறது.
இதனால் கோவைக்குச் சென்று பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. பயண நேர விரயத்தால் அங்கு ஒருவேளை மட்டுமே பயிற்சி செய்ய முடிகிறது. மழைக்காலங்களில் மண் தரையில் பயிற்சி செய்ய முடியாது. திருப்பூரில் செயற்கை ஓடுதளம் அமைந்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் விளையாட்டுப் பயிற்சிக்கு வருவார்கள். இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் தவறான பாதைக்குச் செல்வதையும் தடுக்க முடியும்.
திட்ட அறிக்கை தயார்
சந்திரகுமார், நிறுவனர், ‘வளம்’ அமைப்பு:
சர்வதேச தொழில் நகரமாக வளர்ந்து வரும் திருப்பூருக்கு செயற்கை ஓடுதளம் மிகவும் அவசியம். இதை அமைக்க மட்டும் ரூ.10 கோடி செலவாகும். திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானம் இதற்கு ஏற்ற இடமாக இருக்கும். அங்கு ரூ.24 கோடி மதிப்பில் செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், கூடைப்பந்து மற்றும் வாலிபால் மைதானங்கள் அமைக்கத் திட்ட அறிக்கை தயாராக உள்ளது.
அலகுமலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலத்திலும் விளையாட்டு வசதிகளை உருவாக்கலாம். தமிழக அரசின் 'மிஷன் 2036' திட்டம், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் செயலரின் ஊக்குவிப்பு, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் நிறைவேறும் என நம்புகிறோம். இதற்கான முயற்சிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறோம்.
அரசு மீது நம்பிக்கை
சக்திவேல், விளையாட்டு ஆர்வலர்:
மாரத்தான் உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி ஊக்குவித்து வருகிறோம். திறமை இருந்தும் நவீனப் பயிற்சி வசதிகள் இல்லாததால் பலரால் ஒலிம்பிக் மற்றும் தேசியப் போட்டிகளுக்குத் தகுதி பெற முடியவில்லை. இவ்வாறு வாய்ப்புகளை இழந்த பலர் எங்கள் நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர்.
உள்ளூர் நிறுவனங்களின் ஆதரவுடன் செயற்கை ஓடுதளம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.