5 மணி நேரம் மின் தடை: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் மின்வாரிய கோட்டத்தில், டிரான்ஸ்பார்மர் பழுதால் பல்வேறு பகுதிகளில் தினமும் 4 முதல் 5 மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆத்துப்பாளையம் மின்வாரிய கோட்டத்தில் பல ஆண்டுகளாக பழைய டிரான்ஸ்பார்மர்கள் வாயிலாக மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்து பழுதடைந்துள்ளது. இதனால், மீதமுள்ள மூன்று டிரான்ஸ்பார்மர்களை மட்டுமே பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வேலம்பாளையம், சொர்ணபுரி, பி.டி.ஆர். நகர், ஜவஹர் நகர், ஸ்ரீபதி நகர், திலகர் நகர் மற்றும் அனுப்பர்பாளையம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. தினமும் 4 முதல் 5 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும், தற்போதைய மின்தேவைக்கு ஏற்ப போதிய திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படாததே பிரச்னைக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, ஆத்துப்பாளையம் மின்வாரிய கோட்டத்தின் மின்விநியோகக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும். பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றுவதுடன், கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து, அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement