வினேஷிற்கு சச்சின் ஆதரவு

புதுடில்லி: ''பைனலுக்கு முன் தான், எடை அடிப்படையில் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வெள்ளிப்பதக்கத்தை, அவரிடம் இருந்து பறிப்பது, விளையாட்டு உணர்வுக்கு எதிரானது,'' என சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்று போட்டியில் வெற்றி பெற்ற இவர், ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.
மறுநாள் பைனலில் பங்கேற்க இருந்தார். இதற்கு முன் நடந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்டதை (50 கிலோ) விட, 100 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சர்வதேச மல்யுத்த விதிமுறைப்படி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த விரக்தியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான், இந்தியாவின் சச்சின் 52, ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த விதிகளில் மாற்றங்கள், மறுபரிசீலனை செய்து கொள்ளலாம். வினேஷ் போகத் நேர்மையான முறையில் விளையாடி, பைனலுக்கு முன்னேறினார். பைனலுக்கு முன், எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் இவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்குவது தான் சரி. இதற்கான தகுதி அவருக்கு உள்ளது. ஆனால் பதக்கத்தை அவரிடம் இருந்து பறித்தது விளையாட்டு உணர்வுக்கு எதிரான செயல்.
ஒருவேளை விதிமுறைகளை மீறி, ஊக்கமருந்து பயன்படுத்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால், அதை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அதுபோன்ற சூழலில் எவ்வித பதக்கமும் வழங்காமல், கடைசி இடத்துக்கு தள்ளப்படுவது சரியானது தான்.
ஆனால், வினேஷ் போகத்தை பொறுத்தவரையில் எதிரணி வீராங்கனைகளை வீழ்த்தி, பைனலுக்கு வந்துள்ளார். இவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கு தான் சரியாக இருக்கும்.
தற்போது சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தின் முடிவுக்காக நாம் காத்திருக்கிறோம். வினேஷ் போகத்துக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என நம்பலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தீர்ப்பு எப்போது
தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் 'அப்பீல்' செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நேற்று நடந்தது. பாரிஸ் ஒலிம்பிக் முடியும் முன் (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement