சுப்ரீம் கோர்ட் அனுமதி பெற்று பேபி அணை சீரமைப்பு: துரைமுருகன்

வேலுார்,:''முல்லை பெரியாறில் உள்ள பேபி அணையின் பழுதை நீக்குவது, உச்சநீதிமன்ற அனுமதி பெற்று தான் சீரமைக்கப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் என்ற இடத்தில், பனை விதை நடும் பணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது:

பேபி அணை தொடர்பாக, உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது, 142 அடி வரை தண்ணீர் உயர்த்தலாம். ஆனால், பேபி அணையை பலப்படுத்தினால், 152 அடி வரை தண்ணீரின் அளவை உயர்த்தலாம். அந்த அணையின் அருகில், 15 மரங்கள் இருந்த நிலையில் தற்போது, 7 மரங்கள் தான் உள்ளது.

அரை மணி நேரத்தில் அந்த மரங்களை வெட்டி எடுத்து விடலாம். நம் எல்லையை ஒட்டி தான் மரங்கள் உள்ளன. ஆனால், அது பல பிரச்னைகளை உருவாக்கும். அப்பிரச்னையை சட்டப்படி சந்திக்க, உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறியும் இன்னும் வெட்டப்படவில்லை. இருந்தாலும், பேபி அணையின் பழுதை நீக்குவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் சட்டப்படி அனுமதி பெற்று சீரமைக்கப்படும்.

ஏரியில் விவசாயிகள் மண் எடுத்துக் கொள்வதை வரவேற்கிறேன். ஆனால், விவசாயிகள் என்ற போர்வையில் ஒரு லாரிக்கு பதில், 20 லாரியில் மண் எடுக்கின்றனர். நீர் நிலைகளில் மண் எடுக்கும்போது ஒரே சமமாக இருக்க வேண்டும். ஆனால், மண் எடுப்பவர்கள் கிணறு போல நோண்டி விடுகிறார்கள். அதனால் தான் ஏரியில் மண் எடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மண் எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த காலங்களில் எங்கு தண்ணீர் தேங்கியது என்பதை கண்டுபிடித்து, அந்தந்த துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு பலமுறை ஆய்வு செய்யப்பட்டு, தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை அவ்வளவு சேதாரத்தை ஏற்படுத்தாது.

இவ்வாறு கூறினார்.

Advertisement