போலி ஆதார் அட்டை விவகாரம்; அரசு டாக்டர் உட்பட மூவருக்கு 'சம்மன்'

திருப்பூர்: திருப்பூரில் சில நாட்களுக்கு முன் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில், தன்வீர் அகமது, அகமது மம்மூஸ் ஆகியோர் வங்கதேசத்தில் உறவினரை கொலை செய்து விட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தது தெரிந்தது.


ஓராண்டுக்கு முன் இவர்களுக்கு, அருள்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர், இ - சேவை மையத்தில் ஆதார் கார்டு பெற்று கொடுத்தது தெரிந்தது. அவர் மீது போலி ஆவணங்கள் தயாரிப்பு தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.


போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். நான்கு ஆண்டுகளாக மாரிமுத்து உள்ளூர், வெளியூர் நபர்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு ஆதார் பெற்று கொடுத்து வந்தார்.

அவரால் எத்தனை விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன, அவற்றில், வடமாநிலத்தினருக்கு பெற்று கொடுத்தது, இணைத்த ஆவணங்கள் சரியாக என, அனைத்தையும் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது:

வங்கதேசத்தினர் கைது விவகாரத்தில், ஆதார் கார்டு மாநகராட்சி உள்ள இ - சேவை மையத்தில் பெற்றது தெரிய வந்தது. உடந்தையாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய பல்லடத்தை சேர்ந்த அரசு டாக்டர், இ - சேவையில் உள்ள பெண் பணியாளர் மற்றும் பான் கார்டு வாங்கி கொடுத்த வாலிபர் என, மூவரிடம் விசாரிக்க சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரித்த பின் தான் தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறுகையில், ''ஆதார் கார்டு பெற்று கொடுத்தது தொடர்பாக, ஆதார் ஊழியர், டாக்டர் ஆகியோரிடம் விசாரிக்க உள்ளோம். இதற்காக மூவருக்கும் சம்மன் வழங்கி உள்ளோம். ஓரிரு நாளில் நேரில் விசாரிக்க உள்ளோம். மாரிமுத்து வாயிலாக பெறப்பட்ட விண்ணப்ப ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.

கண்காணிப்பில் மையங்கள்

சமீபத்தில் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதில், மூன்று பேருக்கும் நகரில் உள்ள ஆதார் மையம் மூலமாக ஆதார் கார்டு பெற்று கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இதனால், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையங்களை கமிஷனர் அறிவுறுத்தலின்படி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோல ஒவ்வொரு மையத்தில், இடைத்தரகர்கள் உள்ளனரா, அவர்கள் ஏதாவது விதிமீறல்களில் ஈடுபடுகின்றனரா என்பது குறித்தும், போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Advertisement