கோவில் நிலப்பிரச்னையில் மோதல் பண்ருட்டி அருகே 6 பேர் கைது

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கோவில் நிலத்தகராறில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

காடாம்புலியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவகி ஆடலரசு. தி.மு.க.,வை சேர்ந்த இவர் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன். இவருக்கும் அதே பகுதி அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜமணிகண்டன் என்பவருக்கும் இடையே, ஊரில் உள்ள அய்யனார் கோவில் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் காலை இரு தரப்பினருக்கும் இடையே கோவில் நிலம் தொடர்பாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன் முன்னிலையில் அன்றிரவு 7:00 மணியளவில் ஒன்றிய துணை சேர்மன் தேவகி ஆடலரசு வீட்டின் அருகில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசார் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் ராஜமணிகண்டன் தரப்பினர் ஆடலரசு தரப்பினர் மீது சராமரியாக கல், கட்டைகளை கொண்டு தாக்கினர். இதில் ஆடலரசு ஆதரவாளர்கள் மணிமாறன், லோகேஸ்வரன் உட்பட 5 பேர் படு காயமடைந்தனர்.

இதுகுறித்து மணிமாறன், 44, கொடுத்த புகாரின்பேரில் ராஜமணிகண்டன் உட்பட 7 பேர் மீது காடாம்புலியூர் போலீசார் மீது வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில் ராஜமணி கண்டன், 46; ராஜ்குமார், 42; அன்பழகன், 51; கலையரசு, 25; ஆறுமுகம் மகன் வெங்கடேசன், 30; லட்சுமணன் மகன் வெங்கடேசன், 43, உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். மேலும் ரகுநாத் என்பவரை தேடி வருகின்றனர்.

துணை சேர்மனின் கணவர் மீது வழக்கு

மோதலில்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி, காயமடைந்த ஆடலரசு மற்றும் அவரது ஆதரவாளர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தர்ணா வில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய துணை சேர்மன் தேவகியின் கணவர் ஆடலரசு, 59; பிரபாகரன், 34; கருணாகரன், 35; சஞ்சய், 24; இளங்கோவன், 62; ராமானுஜம், 65; ஆகியோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Advertisement