800 கிராம் வெயிட்டு... 200 கிராம் தங்கம்... அடேங்கப்பா, ஒரு சேலையின் விலை இவ்வளவா?


ஐதராபாத்: தெலங்கானாவில் முழுக்க முழுக்க தங்கத்தில் நெசவு செய்யப்பட்ட சேலை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அவரது மகளின் திருமணத்திற்கு, பிரத்யேகமாக தங்கத்தினால் ஆன சேலையை செய்து கொடுக்குமாறு, சிர்சில்லாவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற நெசவாளரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுத்துள்ளார்.

மிகவும் நுணுக்கமாகவும், கலைநயத்துடன் செய்யப்பட்ட இந்த தங்க சேலை, 49 இன்ச் அகலமும், 5.5 மீட்டர் நீளத்தையும் கொண்டதாகும். 800 முதல் 900 கிராம் எடை கொண்ட இந்த சேலையில், 200 கிராம் சுத்தத் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


இது தொடர்பாக நெசவாளர் விஜய் குமார் கூறுகையில், " தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கத்தை நூல் போன்ற வடிவமைப்புக்கு மாற்றப்பட்டது. பின்னர் 10 முதல் 12 நாட்களில் சேலை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திருப்தியை கொடுத்துள்ளது. பிரத்யேகமான சேலையை தயார் செய்தது பெருமையாக உள்ளது.


தங்க சேலையை தயாரித்ததன் மூலம், நெசவு தொழில் மீதான என்னுடைய கனவு மற்றும் கலை மீதான ஆர்வமும் பிரதிபலிக்கிறது," எனக் கூறினார்.

Advertisement