ஆயிரம் சந்தேகங்கள்: 'டிபன்ஸ், பிசினஸ் சைக்கிள்' பண்டுகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடியுமா

பங்குச் சந்தையில் 5 லட்சம் ரூபாயை, 'பண்டமென்டல் அனாலிசிஸ்' முறைப்படி முதலீடு செய்தால், மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மை?



ஜெ.ஜெயக் குமார், மின்னஞ்சல்

ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. உங்களிடம் யாராவது இப்படிப்பட்ட ஆசை வார்த்தை சொல்லியிருந்தால், அதை நம்ப வேண்டாம். இதர முதலீட்டு இனங்களை விட, பங்குச் சந்தை
சற்றே கூடுதல் வருவாய் தரக்கூடும் என்பது உண்மை தான். ஆனால், நீங்கள் குறிப்பிடுவது அதீத எதிர்பார்ப்பு. இன்றைக்கு அல்ல, என்றைக்குமே அது சாத்தியம் இல்லை.

நான் என்.ஆர்.ஐ., ஆக இருந்தபோது, இந்தியாவில் ஒரு தனியார் வங்கியில் மூன்று பாலிசிகள் எடுத்தேன். இவை, அடுத்த மாதம் முதிர்வடையும். தற்போது தாயகம் திரும்பிவிட்டேன். வருமான வரியும் தாக்கல் செய்கிறேன். முதிர்வு தொகையை எதில் முதலீடு செய்து, வருமானவரி விலக்கு பெறுவது?



எஸ்.சங்கரகிருஷ்ணன், சென்னை

வங்கிகளில் உள்ள ஐந்து ஆண்டு வரி சேமிப்பு வைப்பு நிதித் திட்டங்கள், அஞ்சலகத்தில் உள்ள ஐந்து ஆண்டு டேர்ம் டிபாசிட்டுகள், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்டவை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். இவற்றில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

என் 13 வயது பேத்தி அமெரிக்க பிரஜை; சென்னையில் வசிக்கிறாள். அவளது பெற்றோர் இருவரும் இந்தியர்கள், மத்திய அரசு பணியாளர்கள். பேத்தி பெயரில் 'என்.பி.எஸ்., வாத்சல்யா' திட்டத்தில் பணம் போடலாமா?



டி.சுவாமிநாதன், நங்கநல்லூர்

இந்த திட்டம், 18 வயதுக்குட்பட்ட மைனர் இந்திய பிரஜைகளுக்கே பொருந்தும் என்று, ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இந்தியர்களாக இருப்பது மட்டும் போதாது; குழந்தையும் இந்தியக் குடிமகளாக இருக்க வேண்டும். இப்போதைக்கு இப்படித் தான் இருக்கிறது. வருங்காலத்தில் மேலும் பல மாற்றங்கள், திருத்தங்கள் வரக்கூடும்.


'டிபன்ஸ் பண்டு, பிசினஸ் சைக்கிள் பண்டு' என்றெல்லாம் மியூச்சுவல் பண்டுகளில் புதிய பண்டு வெளியீடுகள் வருகின்றனவே, இவற்றில் முதலீடு செய்யலாமா?



பவித்ரா வேணுகோபால், மதுரை

வேண்டாம். இவையெல்லாம் குறிப்பிட்ட துறைகளை சார்ந்து உருவாக்கப்படும் பண்டு திட்டங்கள். இந்தத் திட்டத்தில் இருந்து திரட்டப்படும் பணம், அந்தத் துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். ஆனால், இவை எல்லாம் குறுகிய துறைகள். ஒருவேளை, நாளை இந்த நிறுவனங்கள் போதிய வருவாய் ஈட்டவில்லை என்றால், இந்தப் பண்டுகளும் லாபம் ஈட்டாது. அதைவிட, 'லார்ஜ் கேப், பிளெக்சி கேப்' பண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.

நாமினிக்கும், சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன?



இரா.மணிவண்ணன், கோவை

சொத்தின் உரிமையாளர், ஒரு நபரை நாமினியாக போடலாம். அந்த உரிமையாளர் மறைந்துவிட்டால், சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் வந்து உரிமை கோரும் வரை, அந்தச் சொத்தின் பாதுகாவலராக நாமினி இருப்பார். பின்னர், வாரிசுதாரர்களுக்குச் சொத்தை மாற்றிக் கொடுத்துவிட வேண்டும். அதனால் தான், வங்கிகளிலும் இதர இடங்களிலும் வாரிசையே நாமினியாகவும் பதியச் சொல்கின்றனர்.

நான், மருந்து கடையில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற மூத்த குடிமகன். தற்போது, 50,000 ரூபாய்க்குள் ஷேர் சர்டிபிகேட் வாங்கி, அதில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்கு என்ன வழிமுறைகள்? நான் வருமான வரி செலுத்தும் நபர் இல்லை. ஆதலால், நான் இதில் முதலீடு செய்தால் இதற்கும் வருமான வரிக்கும் சம்பந்தம் உண்டா?



பி.சுப்ரமணியன், விருதுநகர்

வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! பங்குச் சந்தை என்பது துறைசார் வல்லுனர்களையே திணறடிப்பது. தங்கள் கேள்வியைப் படிக்கும்போதே, தாங்கள் இந்த துறைக்கே புதிய நபர் என்று தெரிகிறது. கூடுதல் வருவாய் ஈட்டலாம் என்றெல்லாம் யாரேனும் ஆசை காட்டியிருந்தால், அதை மறந்துவிடுங்கள். அஞ்சலகம், சிறுநிதி வங்கிகள் உள்ளிட்டவற்றில் வைப்புநிதித் திட்டங்கள் உள்ளன. அவற்றில் உங்கள் பணத்தைப் போடுங்கள். நம்பிக்கையாகவும் உறுதியாகவும் உங்கள் பணம் வருவாய் ஈட்டித் தரும்.

ஒரு பொருளை பணம் செலுத்தி வாங்கும்போது, முழு தொகையையும் செலுத்துகிறோம். தள்ளுபடி எதுவும் தருவதில்லை. அதுவே, கடன் அட்டை வாயிலாக செலுத்தினால், தள்ளுபடி, மற்றும் வட்டி இல்லா தவணை எல்லாம் தருகின்றனர். இதில், வாடிக்கையாளர்கள் எங்கோ ஏமாற்றப்படுகின்றனர். இப்படி வெளிப்படைத்தன்மை இல்லாத வர்த்தகம் குறித்து, யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்?



ஆர்.அருணாசலம், சென்னை

இந்த வலைதளத்துக்கு செல்லுங்கள், https://consumerhelpline.gov.in/index.php இங்கே உங்கள் புகாரை பதிவு செய்ய கட்டணமில்லா தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்சாப் எண், செயலி, இணைய முகவரிகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம். 45 நாட்களில் பதில் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்,
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை,
சென்னை - 600 014
- என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
ph:98410 53881

Advertisement