100 நாள் வேலை கேட்டு செம்பரம்பாக்கத்தினர் மனு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 451 மனுக்களை பெற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா, அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
கால்வாய் சீரமைக்க வேண்டும்:
பூசிவாக்கம் சிற்றேரி நீர்வரத்து கால்வாய், காஞ்சிபுரம் பெரியார் நகரில் துவங்கி, கன்னிகாபுரம், வள்ளுவப்பாக்கம் வழியாக, பூசிவாக்கம் வருகிறது.
இக்கால்வாயில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு, செடி, கொடி வளர்ந்துள்ளதாலும், கால்வாய் சுவர் ஓட்டையானதால், ஏரிக்கு நீர்வரத்து குறைந்து, வேகவதி ஆற்றுக்கு வீணாக செல்கிறது. எனவே, நீர்வரத்து கால்வாயை நீர்வள ஆதாரத் துறையினர் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு பூசிவாக்கம் சின்னப்பையன் மனு அளித்துள்ளார்.
கைக்குழந்தையுடன் பெண் மனு:
நானும் எனது கணவரும் உத்திரமேரூர் தாலுகா, ஒட்டந்தாங்கல் கிராமத்தில் வசித்து வந்தோம். எனது கணவருக்கு உறவினர்கள் மூலம் கொலை மிரட்டல் இருப்பதாக, ஏற்கனவே திருவண்ணாமலை போலீசில், பாதுகாப்பு கேட்டிருந்தோம்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி, காட்டுப்பாக்கம் மேம்பாலம் அருகே பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு பின்னர் இறந்தார். இந்த சம்பவத்தில், உறவினர்கள் தலையீடு இருப்பதாக, உத்திரமேரூர் போலீசில் புகார் அளித்தோம். இதுவரை நடவடிக்கை இல்லை.
கணவரை கொலை செய்துவிட்டதாக கூறி கைக்குழந்தையுடன் பாக்கியலட்சுமி என்பவர் அளித்த மனுவில் கூறியுள்ளார்.
100 பேர் மனு
காஞ்சிபுரம் ஒன்றியம், ஆரியபெரும்பாக்கம் ஊராட்சியில், செம்பரம்பாக்கம், துலங்கும்தண்டலம், ஆரியபெரும்பாக்கம் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. எங்கள் ஊராட்சியில், ஆரியபெரும்பாக்கம், துலங்கும்தண்டலம் ஆகிய இரு கிராமங்களுக்கு மட்டுமே, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் கிராம மக்களுக்கு, கடந்த 6 மாதங்களாக பணி வழங்கப்படவில்லை. இதுபற்றி, ஊராட்சி தலைவர், பி.டி.ஓ., ஆகியோரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் திரண்டு மனு அளித்தனர்.