ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் யார்? சென்னையில் என்.ஐ.ஏ., விசாரணை
சென்னை : இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.
லெபனான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த, ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, இஸ்ரேல் ராணுவம் தீர்த்துக்கட்டியது.
அவர் வீரமரணம் அடைந்தது போல, 'பேனர்' வைத்து, சென்னை மீர்சாகிப்பேட்டை பள்ளிவாசல் அருகே அஞ்சலி செலுத்திய நிகழ்வு, மத்திய, மாநில உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை கேள்விக்குறியாக்கி உள்ளது.
ஏற்கனவே, கர்நாடக மாநிலம் பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் குண்டு வைத்த குற்றவாளிகள், ராயப்பேட்டை பகுதிகளில் தங்கியிருந்தனர்.
மேலும், ராயப்பேட்டை, மீர்சாகிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அதிகம் வசிப்பதாக, மத்திய உளவு அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், ஹிஸ் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது, ஆயுத பயிற்சி அளித்தது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ராயப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு பேனர் வைத்த விவகாரம் தொடர்பாகவும், முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர். பேனர் வைத்தவர்கள் யார், அவர்களுக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கும் என்ன தொடர்பு மற்றும் அவர்களின் 'நெட்வொர்க்' குறித்து என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.