ஊரப்பாக்கத்தில் குப்பை தேக்கம் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலை எங்கும் குப்பை தேக்கம் அடைந்துள்ளது. இதனால், அப்பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
ஊரப்பாக்கம் ஊராட்சியில், மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த பவானி என்பவர் ஊராட்சி தலைவியாக இருந்து வந்தார்.
அவர் மீது கவுன்சிலர்கள் கொடுத்த புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் ஆவணங்களை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டது.
அதில், ஊராட்சி தலைவி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து, தலைவியின் பதவியை பறித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பணிகளை, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் கவனித்து வருகிறார். ஆனால், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் ஆங்காங்கே குப்பை தேக்கமடைந்து, முறையாக அகற்றப்படாமல் உள்ளது.
மேலும், அடிப்படை வசதிகளான சாலை பராமரிப்பு, தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் போன்றவை நடைபெறாமல், பொதுமக்கள் கடுமையாக சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.