அச்சிறுபாக்கம் 4வது வார்டில் ரேஷன் கடை அமைக்கப்படுமா?
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டில், நியாய விலைக் கடை அமைந்துள்ளது. இப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு, தனியார் வாடகை கட்டடத்தில், நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.
பழமையான கட்டடம் என்பதால், கட்டடத்தின் உட்புறப் பகுதிகள் மற்றும் வெளிப்பகுதிகளில் சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்து வருகிறது.
இதனால், ரேஷன் பணியாளர்கள் மற்றும் பொருட்கள் வாங்கிச் செல்ல வரும் பொதுமக்கள், மிகுந்த அச்சத்துடன் கடைக்கு சென்று வருகின்றனர்.
மேலும், பருவமழை காலங்களில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பாதுகாப்பதில் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
பேரூராட்சி நான்காவது வார்டு பகுதியில் இடம் தேர்வு செய்து, புதிதாக நியாய விலைக் கடை கட்டடம் கட்டித் தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.