கோவில் நந்தவனங்களை பராமரிக்க நடவடிக்கை; அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை; இந்திய மருத்துவ அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஜெயவெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்ட கோவில்களில் நந்தவனங்கள் இருந்தன. இவற்றின் பெரும்பகுதி வணிக வளாகம், அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன; குப்பை குவிக்கப்படுகிறது.

நந்தவனங்களை பாதுகாக்க மற்றும் அவற்றிலுள்ள பூக்களை பறித்து, மாலையாக கோர்த்து கோவில்களுக்கு வழங்க பணியாளர்கள் இருந்தனர்.

அவர்கள் வேறு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றனர். உடல், மனநலம், அமைதிக்காக கடவுளை வழிபட வரும் பக்தர்களுக்கு நந்தவனங்கள் அமைதி, நறுமணத்தை தருகின்றன.

நந்தவனங்களை பாதுகாக்க கோரி தமிழக அறநிலையத் துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: நந்தவனங்களை பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, அறநிலையத் துறை முதன்மை செயலர், கமிஷனர் அக்., 21ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement