திருத்தணியில் திரிந்த 15 பன்றிகள் பிடிப்பு

திருத்தணி: பருவ மழை துவங்க உள்ளதால், சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக பன்றிகளால் மூளை காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. ஆகையால், பேரூராட்சி, நகராட்சிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 10 துப்புரவு ஊழியர்கள், நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த, 15 பன்றிகளை பிடித்தனர்.

அதை தொடர்ந்து சரக்கு வேனில் பன்றிகளை அடைத்து, திருத்தணி அருகே உள்ள காப்பு காட்டில் உயிருடன் விட்டனர்.

மேலும், பன்றி வளர்க்கும் உரிமையாளர்களிடம் துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், நகராட்சியில் பன்றிகள் வளர்ப்பதற்கு அரசு தடை விதித்துள்ளதால், பன்றிகள் வளர்க்கக் கூடாது. இதை மீறி பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு அபராதமும், பன்றிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் துப்புரவு ஆய்வாளர் எச்சரித்தார்.

Advertisement