பஞ்சரான ஒன்றிய சாலையால் ஐந்து கிராமவாசிகள் அவஸ்தை

கடம்பத்துார்: கடம்பத்துார் ஊராட்சியில், ஸ்ரீதேவிக்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து, வெண்மனம்புதுார் ஏரிக்கரை வழியாக, காரணி, விடையூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து, மண் சாலையாக இருந்தது.

இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியில், 200 மீ., துாரத்திற்கு சாலை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதனால், சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, மோசமான நிலையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், விடையூர் ஏரியில் அரசு அனுமதியுடன் சவுடு மணல் அள்ளும் பணி நடந்து வந்தது.

இதையடுத்து, சவுடு மணல் லாரிகள் இந்த ஏரிக்கரை சாலை வழியே சென்றதால், இந்த சாலை சில இடங்களில் சேதமடைந்து மெகா பள்ளங்கள் உருவாகியுள்ளன.

இந்த ஏரிக்கரை சாலையை, வெண்மனம்புதுார், செஞ்சிபானம்பாக்கம், காரணி மற்றும் விடையூர் செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சில நேரங்களில், பகுதிவாசிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement