புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் சாதனை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்

நெய்வேலி: புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை, 2030ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டு என்.எல்.சி., செயல்படுவதாக, அந்நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:

என்.எல்.சி., கடந்த 2015ல், இதே நாளில், நெய்வேலியில் 10 மெகாவாட் சூரிய மின் நிலையம் அமைத்ததன் மூலம், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் வரலாற்று முயற்சி மேற்கொண்டது.

இந்தியா, புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் உற்பத்தியில் மெகாவாட் என்ற அளவிலிருந்து ஜிகாவாட் என்ற அளவிற்கு மாற வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவை ஏற்று, நாட்டிலேயே 1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்யும் முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி., திகழ்கிறது.

வரும் 2030ம் ஆண்டிற்குள், தற்போதைய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை 10 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

நிலக்கரி துறையில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், சர்வதேச சோலார் கூட்டணியில் என்.எல்.சி., உறுப்பினராகியுள்ளது.

அத்துடன், புதிதாக உருவாக்கப்படும் புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் (சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம்), எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் (ஈ.எஸ்.எஸ்), பசுமை ஹைட்ரஜன், நீர் உந்து மின் திட்டங்கள், பழுப்பு நிலக்கரியிலிருந்து மெத்தனால் தயாரித்தல், சுரங்க மேல் மண்ணிலிருந்து 'எம்-சாண்ட்' என்ற மணல் தயாரிப்பது மற்றும் நிலையான தன்மைக்கான முக்கிய கனிம ஆய்வு செய்தல் போன்றவற்றில் என்.எல்.சி., ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement