கொள்ளையனை பின்தொடரும் 50,000 பேர்; கேரளா போலீஸ் அதிர்ச்சி

8


திருச்சூர்: கேரளாவில் கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையனுக்கு இன்ஸ்டாகிராமில் 50 ஆயிரம் ஃபாலோயர் இருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


கேரளா, திருவல்லாவிற்கு அருகிலுள்ள திருமூலபுரத்தைச் சேர்ந்தவர் ரோஷன் வர்கீஸ். இவருக்கு வயது 29. இவர், இன்ஸ்டாகிராமில் 50,000 பாலோயர்களை கொண்டுள்ளார். இருப்பினும், ரோஷன் ஒரு மோசமான திருடன் என்பது அவரது பெரும்பாலான ரசிகர்களுக்குத் தெரியாது. பிளஸ் டூ வரை மட்டுமே படித்துள்ள இவர் மீது 22 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரைப் பற்றி, திருச்சூர்-பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சின் கேமராவில், பதிவான காட்சிகளில் இருந்து முக்கிய ஆதாரம் கிடைத்தது.


4 பேர் கைது




தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் 2.5 கிலோ தங்கத்தை ரோஷன் வர்கீஸ் கும்பல் கொள்ளையடித்துச் சென்றதை, போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து வர்கீஸ், சித்திக், நிஷாந்த், நிகில்நாத் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இது குறித்து போலீசார் கூறியதாவது: ரோஷனின் குற்ற வரலாறு கேரளாவிற்கு அப்பால் நீண்டுள்ளது. தமிழகம், கர்நாடகாவில் இதேபோன்று நெடுஞ்சாலையில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள, சித்திக் மீது 8 வழக்குகளிலும், நிஷாந்த் மீது ஒரு வழக்கிலும் தேடப்பட்டு வருகின்றனர்.


கோயம்புத்தூரில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது குறித்து மர்மநபர்களுக்கு தகவல் கொடுத்த நபரையும் விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். வழிப்பறி கொள்ளையனுக்கு இன்ஸ்டாகிராமில் 50 ஆயிரம் ஃபாலோயர்ஸ்கள் இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்களின் பின்னணி தெரியாமல் அவர்களுடன் தொடர்பில் இருப்பதும், உறவாடுவதும் எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பதை ரோஷன் வர்கீஸ் போன்றவர்களின் செயல் வெளிக்காட்டுவதாக உள்ளது.

Advertisement