ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (16)

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.

கொரோனா கால இழப்பு: அபராதம் தவிர்க்க என்ன வழி?



என் பெயர் ஆர். வைத்தியநாதன்; 1989ல் 'பாஸ்கரா எலெக்டிரிகல்ஸ்' நிறுவனத்தை துவக்கி, நடத்தி வருகிறேன். 2009 முதல் கட்டுமானத் துறைக்கான வேதிப்பொருள் விற்பனை செய்யும் 'சிகா' (எஸ்.ஐ. கே.ஏ.) நிறுவனத்தின் சரக்கு கையாளும் முகவர் மற்றும் வினியோகஸ்தராக இருந்து வருகிறேன்.

கடந்த 2019ல் ரூ.1 கோடி மதிப்பிலான சரக்குகளை வாங்கி இருப்பு வைத்தோம். துரதிருஷ்டவசமாக, கோவிட் பெருந்தொற்று காரணமாக, ஓராண்டுக்கு வணிகம் செய்ய முடியவில்லை. அந்த இருப்பை விற்க முடியவில்லை. கட்டுமானத்துக்கான இந்த வேதிப்பொருட்கள் ஓராண்டு வரைதான் பயன்படுத்த முடியும்; காலாவதியாகிவிட்டதால், பெரும் இழப்பு ஏற்பட்டது.

மேலும், எங்களின் டீலர்கள் பலர் ஜி.எஸ்.டி.ஆர்., 3பி தாக்கல் செய்யாமல் தொழிலை மூடிவிட்டனர். இதனால், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் எங்களுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த அபராதம் எங்களுக்கு பெரும் சுமையாகி விட்டது. எங்களின் நிதிநிலைமை மோசமடைந்துவிட்டது. ஜி.எஸ்.டி., நடைமுறைகள் குறித்த போதிய புரிதல் இல்லாததால் இந்த சூழலில் இருந்து மீள முடியவில்லை. 67 வயது மூத்த குடிமகனாக இப்பிரச்னையைக் கையாள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளேன் என் பிரச்னைக்கு ஒரு தீர்வு தேவை

நிபுணர் கருத்து



ஆடிட்டர் ராஜபாலு: கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இது போன்று ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாம் ஒரு பொருளை வரி கட்டி வாங்கும்போது, யாரிடம் பொருள் வாங்கினோமோ அவர் ரிட்டர்ன் தாக்கல் செய்தால்தான், நாம் உள்ளீட்டு வரி (ஐ.டி.சி.,) எடுக்க முடியும். '3 பி'ல்காட்டாததால், எனக்கு அரசு நிறைய வரி விதித்து விட்டது, பாதிக்கப்பட்டுள்ளேன் என்கிறார். உண்மையில் அரசு இவ்விஷயத்தில் கருணை காட்டாது.

இவர் தனது நேர்மையை எப்படி நிரூபிக்க வேண்டும் என்றால், மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். 'நான் கொள்முதல் செய்த போது, செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தியிருக்கிறேன்' எனக் கூறி, தான் கொள்முதல் செய்த நிறுவனத்துக்கு அவர் வழங்கிய செக், 'டிடி' போன்ற ஆதாரங்களைச் சமர்ப்பித்து, 'நான் உரிய வரியை வங்கி வாயிலாக செலுத்திவிட்டேன்.

விற்பனையாளர் வரி கட்டாததற்கு என்னிடம் கேட்பது நியாயமில்லை' என வாதிடலாம். அவர்கள் மறுக்கும்பட்சத்தில் முதலில் மேல் முறையீடு பின்னர் தீர்ப்பாயம் செல்லலாம். தீர்ப்பாயத்திலும் நிவாரணம் கிடைக்காவிட்டால், நீதி மன்றத்தை அணுகலாம். வெளிமாநில சில உயர் நீதிமன்றங்கள் இதுதொடர்பான வழக்குகளில், 'பொருள் வாங்கியவர் வரி ஏய்ப்பு செய்யவில்லை. அவர் உரிய வரியையும் சேர்த்து தந்துள்ளார், பணம் வாங்கியவர் செலுத்தாதற்கு இவர் பொறுப்பாக முடியாது' என சில தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

தனிப்பட்டமுறையில், அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது. ஜி.எஸ்.டி., சட்டம் தெளிவாக இருக்கிறது. மாதாமாதம் விற்பனை பட்டியலை ஜி.எஸ்.டி.ஆர்., 1 படிவம் வாயிலாக 11ம் தேதிக்குள் பைல் செய்தால் மட்டுமே, அது கொள்முதல் பட்டியலாக 14ம் தேதி 2பி-ல் காட்டும். அதை மட்டும்தான் இன் புட் எடுக்க வேண்டும். 'நான் கொடுத்து விட்டேன். அவர் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை' எனக் கூற முடியாது. பழைய முறையில் சில குளறுபடிகள் இருந்தன. தற்போது இல்லை. மனுதாரர் திறமையான ஆடிட்டர், வழக்கறிஞர்களை அணுகி மேல் முறையீடு செய்திருக்க வேண்டும். மேல்முறையீடு மற்றும் தீர்ப்பாயம் மூலம் நியாயம் கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றம்தான் ஒரே வழி.

தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.





முகவரி



:

ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!

தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,

சுந்தராபுரம், கோவை - 641 024.

Email: dmrgstviews@dinamalar.in

Advertisement